×

நவீன ரேடார் கண்காணிப்பு வசதியுடன் தனுஷ்கோடி கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கம்: பணிகள் பூமி பூஜையுடன் துவக்கம்

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கடற்க ரையில் நவீன ரேடார் கண்காணிப்பு வசதியுடன் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அமையும் புதிய கலங்கரை விளக்கத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது. ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் மத்திய அரசு, தமிழக கடலோர பகுதியை கண்காணிக்கவும், நவீன வசதிகளுடன் மீனவர்கள் நலனிற்காக கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இதற்காக தனுஷ்கோடியில் பழைய ரயில் நிலையம் அருகே வருவாய்த்துறையினரால் கடந்த ஆண்டு 37 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்ட நிலையில் புதிய கலங்கரை விளக்கம் கட்டுவதற்கு, மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ராமேஸ்வரம் தீவில் ஏற்கனவே பாம்பன் மற்றும் ஓலைக்குடாவில் இரண்டு கலங்கரை விளக்கம் அமைந்துள்ள நிலையில், தற்போது தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம், சுற்றுலாப்பயணிகள் பயன்பெறும் வகையிலும், கடலோர பாதுகாப்பை கண்காணிக்கும் வகையில் நவீன ரேடார் வசதியுடனும் கட்டப்பட உள்ளது. இதற்காக நேற்று பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டு, புதிய கலங்கரை விளக்கம் கட்டும் பணி துவங்கப்பட்டது. மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் ரசாயனங்கள் துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கட்டுமான பணியை முறைப்படி துவக்கி வைத்தார்.
இதில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, எம்எல்ஏ மணிகண்டன், கலெக்டர் வீரராகவராவ், கலங்கரை விளக்கங்கள் துறை தலைமை இயக்குனர் மூர்த்தி, இயக்குனர் வெங்கட்ராமன், சென்னை துறைமுக கழக  சேர்மன் ரவீந்திரா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிதாக அமையும் கலங்கரை விளக்கம் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும், மீனவர்களுக்கு கடலில் 18 நாட்டிகல் மைல் சுற்றளவிற்கு ஒளி பாய்ச்சி வழிகாட்டி உதவும் வகையில் 50 மீட்டர் உயரத்தில் கட்டப்பட உள்ளது. எண்கோண வடிவில் கட்டப்படும் கலங்கரை விளக்கத்தின் மேலே சுற்றுலாப்பயணிகள் சென்று ராமேஸ்வரம் கோயில் உட்பட தீவின் அழகை சுற்றிப்பார்க்கும் வகையில் பார்வையாளர் மாடமும், இங்கு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்படுகிறது. மேலும் கலங்கரை விளக்கத்தின் மேல் கடல் பகுதியை கண்காணிக்கும் வகையிலும் மீனவர்களை பாதுகாத்திடும் வகையில் நவீன ரேடார் கருவி, கேமரா சிஸ்டம் பொருத்தப்படுகிறது.

முழுக்க சோலார் மின்சார வசதியில் செயல்படும் வகையில் கட்டப்படும் கலங்கரை விளக்க வளாகத்தில் அலுவலக அறை, ஊழியர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் ஓய்வு அறை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவையும் இருக்கும். மத்திய இணை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ‘‘தனுஷ்கோடியில் கலங்கரை விளக்கம் சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையிலும், குழந்தைகள் பொழுதுபோக்கு அம்சத்துடனும், இப்பகுதி மீனவர்களுக்கு உதவிடும் வகையில் அமைக்கப்படுகிறது. மீனவர்களின் நலனிற்காக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ரூ.250 கோடி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட சாகர்மாலா திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார்.

Tags : Lighthouse ,Dhanushkodi Beach ,New Lighthouse , Modern Radar Surveillance, Dhanushkodi Beach, Lighthouse, Earth Pooja
× RELATED கரூர் அமராவதி மேம்பாலத்தில் அசுர...