×

தமிழ்நாட்டில் வருகிற மார்ச் மாதம் வெப்பநிலை வழக்கத்தை விட 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற மார்ச் மாதத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. மகாராஷ்திரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் அரை டிகிரியில் இருந்து 1 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் 1 முதல் 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பிப்ரவரியில் நிலவிய வெப்பநிலையின் அடிப்படையில் மார்ச் முதல் ஏப்ரல் வரையிலான வெப்பம் 1.5 டிகிரி  செல்ஷியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

101 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் அதிக வெப்பநிலை

அதே சமயம் இந்தியாவில், 1919ம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பநிலை கொண்ட மாதமாக 2020 ஜனவரி மாதம் விளங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மையம் 1901ம் ஆண்டு முதலான புள்ளிவிபரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதத்தில் சராசரியான குறைந்தபட்ச வெப்பநிலை 20.59டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும். ஆனால், 2020ம் ஆண்டில் இந்த வெப்பநிலை 21.92டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. இது வழக்கத்தைவிட 1.33டிகிரி செல்ஷியஸ் அதிகம் ஆகும்.

1919 ஜனவரி மாதத்தில் 22.13டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்த குறைந்தபட்ச வெப்பநிலைக்கு பிறகு தற்போதுதான் (2020) இந்த அதிகபட்ச அளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.1901ம் ஆண்டில் 1.23டிகிரி செல்ஷியஸ், 1906ல் 1.1டிகிரி செல்ஷியஸ் மற்றும் 1938ல் 1.05டிகிரி செல்ஷியஸ் வீதத்திற்கு வெப்பநிலை அதிகரித்திருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில், 2020 ஜனவரி மாதத்தில் 30.72டிகிரி செல்ஷியஸ் ( சராசரியாக 30டிகிரி செல்ஷியஸ்), 2016ம் ஆண்டில் 1.1டிகிரி செல்ஷியஸ் மற்றும் 2013ம் ஆண்டில் 0.95டிகிரி செல்ஷியஸ் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Tamil Nadu ,Indian Meteorological Department , Indian Meteorological Center, Forecast, Karnataka, Temperature, March, Month
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...