×

டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ராவில் கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி தீவிரம்

ஆக்ரா: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகையை முன்னிட்டு, தாஜ்மகால் அமைந்துள்ள ஆக்ரா நகரில், கலைநயமிக்க சுவரோவியங்கள் வரையும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. டிரம்ப், தன் மனைவி மெலினாவுடன் இரண்டு நாள் பயணமாக, 24ம் தேதி இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியுடன், குஜராத், உத்தர பிரதேச மாநில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். உ.பி., மாநிலம் ஆக்ராவில், தாஜ்மகாலை பார்வையிட உள்ளார். இதையொட்டி அந்நகரை அழகுபடுத்தும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.

சாலைகள் புதுப்பிக்கப்பட்டு, சுவர்களில், இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஓவியங்கள் வரையப்படுகின்றன. சாலை தடுப்புகள், சிலைகள் ஆகியவற்றுக்கு வர்ணம் பூசப்படுகிறது. தாஜ்மகால் அருகே, கலாக்ருதி அரங்கில், முகபத் - தாஜ் என்ற கலாசார நிகழ்ச்சியை, டிரம்ப் பார்த்து ரசிக்க உள்ளார். அவர் வருகையையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 பேர் ஆக்ரா வந்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

குடிசைவாசிகளுக்கு நோட்டீஸ்:
படேல் ஸ்டேடியத்தில் இருந்து 1.5 கி.மீ., தூரத்தில் சிறிய குடிசைப்பகுதி உள்ளது. இங்கு 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதிபர் டிரம்ப் வருகையையொட்டி அந்த குடிசை பகுதிகளை மறைக்கும் விதமாக சுவர் எழுப்பும் பணி சமீபத்தில் துவங்கியது. இந்நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள அந்த குடிசைகளை ஏழு நாட்களுக்குள் காலி செய்யும்படியும், இல்லையெனில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 45 குடும்பங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Tags : Agra ,arrival ,Trump , Trump visit, Agra, artistic, murals, drawing work, intensity
× RELATED சபர்மதி – ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து