×

20 ஆண்டுகளில் அற்புத தருணம் சச்சினுக்கு லாரியஸ் விருது : மெஸ்ஸி, ஹாமில்டனும் தேர்வு

பெர்லின்: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் விளையாட்டுத் துறையின் மிக உயரிய லாரியஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி ஐசிசி உலக கோப்பையை வென்ற பின்னர் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு அரங்கில் நிகழ்ந்த அதியற்புத தருணமாக இது தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஜெர்மனியின் பெர்லின் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான நிகழ்ச்சியில் சச்சினுக்கு லாரியஸ் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சச்சின், ‘இந்த விருதை பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு எத்தனை சக்தி வாய்ந்தது என்பதையும், எங்கள் வாழ்க்கையில் அது எத்தகைய மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது என்பதையும் இவ்விருது  உணர்த்துகிறது’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

2019ம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருதை பார்சிலோனா கால்பந்து கிளப் வீரர் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), பார்முலா 1 கார் பந்தய உலக சாம்பியன் லூயிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) இருவரும் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு பெற்றார். ஜெர்மனி கார் பந்தய வீராங்கனை சோபியா புளோர்ஷ் (19 வயது), இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி மர்ரே, அமெரிக்க நீச்சல் வீரர் நாதன் அட்ரியன் உட்பட 6 பேர் விபத்து/காயத்தில் இருந்து மீண்டு மன உறுதியுடன் மீண்டும் களமிறங்கியதற்காக சிறப்பு விருது பெற்றனர். ஜெர்மனி கூடைப்பந்தாட்ட வீரர் டிர்க் நோவிட்ஸ்கி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

Tags : Hamilton ,Sachin Tendulkar ,Messi , Sachin Tendulkar wins, Laureus award ,20 years,Messi, Hamilton
× RELATED ஹோலி பண்டிகை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!