×

முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் எஸ்சி ஆணைய தலைவர் பதில் தர வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று பொய்குற்றச்சாட்டு கூறி, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிவாசன் என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஜனவரி 7ம் தேதி சம்மன் அனுப்பினார். இதற்கு தடை விதிக்க கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் அதன்   அறங்காவலரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில்  மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டியதில்லையென உத்தரவிட்டது.  தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும்,  முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆவணப்பட்டியல் மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது என்றும் உத்தரவிட்டது. அதனடிப்படையில் முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆணையத் தலைவரிடத்தில் ஆவணப் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், முரசொலி விவகாரம் தொடர்பாக துணைத் தலைவர் முருகன் விசாரிக்க கூடாது என்று நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.அப்போது, திமுக சார்பாக ஆஜரான  மூத்த வக்கீல் பி.வில்சன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  தாழ்த்தப்பட்ட ஆணையத்தின் தலைவரிடம் முரசொலி நிலம்,  பட்டா நிலம்தான் என்பதற்கான ஆவணப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது  ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் முருகன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு  தேர்தலில்  பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

அதனால், முரசொலி மீது அவருக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் பாரதிய ஜனதா கட்சியின் எஸ்சி,எஸ்டி அணியின் தேசிய செயலாளராக பதவி வகித்தவர். அவர்  தற்போது தாழ்த்தப்பட்ட  ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். முரசொலி நில விவகாரம் தொடர்பாக  முருகன் விசாரணை மேற்கொண்டால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விசாரணை மேற்கொள்வார். ஆணையத்தில் மனு தாக்கல் செய்த நிவாசன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் இல்லை. அவர் வழக்கு தொடர முடியாது  என்று வாதிட்டார்.இதைக்கேட்ட நீதிபதி, துணைத்தலைவர் முருகன் அறக்கட்டளை தொடர்பாக  விசாரிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.பின்னர், இந்த வழக்கில் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரை  இணைக்குமாறும், முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு ஆணையத் தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.ஆணையத்தின் துணைத்தலைவர் பாஜவில் பொறுப்பு வகித்தவர், தேர்தலில் திமுகவிடம் தோல்வியடைந்ததால் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுவார்

Tags : Murasoli Foundation ,Chennai High Court ,SC Commission ,Murasoli Foundation Land Affairs SC Commission , Murasoli, Foundation, Land Affairs,Chennai High ,Court order
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி வீட்டை...