×

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தீர்மானம் ஒடிசா அரசுக்கு ராமதாஸ் பாராட்டு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு  நடத்துவதற்கு ஒடிசா அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: ஒடிசாவில் பிற்படுத்தப்பட்டோரின் சாதிவாரி சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடத்துவதற்கான சட்டத் திருத்தமும், தீர்மானமும் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு இத்தகைய கணக்கெடுப்பு நடத்தாத நிலையில், ஒடிசா அரசே கணக்கெடுப்பு மேற்கொள்வது பாராட்டத்தக்கது. மாநில அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒடிசா தீர்மானித்திருப்பதற்கு என்னென்ன காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் தமிழகத்திற்கும் பொருந்தும். எனவே, மாநில அளவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் முன்வர வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஒலி மாசில் சென்னை முதலிடம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவின் இரைச்சல் நிறைந்த பெருநகரங்களில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது என ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. சென்னையில் அதிகரித்து வரும் ஒலி மாசை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் நோய்களும், மன அழுத்தமும் நிறைந்த நகரமாக சென்னை சீரழிவதை தடுக்க முடியாது.

சென்னையில் பகலில் 67.80 டெசிபல் அளவும், இரவில் 64 டெசிபல் அளவும் இரைச்சல் இருப்பதாக மத்திய மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இந்திய தலைநகர் டெல்லியிலேயே ஒலி அளவு பகலில் 61.3, இரவில் 57 டெசிபல் தான் உள்ளது. மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் பகல் நேர ஒலி அளவு 64 டெசிபல் என்ற அளவிலேயே உள்ளன. கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களிலும் ஒலி அளவு குறைவாகவே இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் ஒலி மாசு குறித்து யாருக்கும், எந்த அக்கறையும் இல்லாதது தான் இந்த நிலைக்கு காரணம்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Ramadas ,Odisha ,government , Caste Survey, Odisha Government, Ramadas
× RELATED பெண் அரசு ஊழியர்களுக்கு 10 நாள் கூடுதல்...