×

அதிமுக நிர்வாகிகள் கூறிய கருத்துகளை பரிசீலிப்போம்: ஓபிஎஸ், எடப்பாடி கூட்டறிக்கை

சென்னை: அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியுள்ளதாவது: அதிமுக அரசியல் களத்திலும், தேர்தல் பணிகளிலும் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பற்றியும், மக்களுக்கு இன்னும் எவ்வாறெல்லாம் தொண்டு செய்யலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து, கலந்துரையாடி நம் கடமைகளை திட்டமிட தலைமைக் கழகத்தில் நான்கு நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கும் ஆலோசனைக் கூட்டங்கள் மிகச் சிறப்பாகவும், பயனுடையதாகவும் அமைந்திருந்தன. இந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் சென்றதைக் கண்டு நாங்களும் மகிழ்ச்சியடைகிறோம்.

கட்சியின் அழைப்பை ஏற்று, மாவட்ட ரீதியான ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொண்ட கழக நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். கட்சி பணிகள் குறித்தும், கட்சியின் அரசின் செயல்பாடுகள் குறித்தும், கழக நிர்வாகிகள் அனைவரும் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினீர்கள். கழகம் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் வகையில் நீங்கள் அனைவரும் தெரிவித்துள்ள கருத்துகளை பரிசீலித்து ஆக்கப்பூர்வமான வகையில் கழகத்தை வழிநடத்திச் செல்வோம் என்று உறுதி கூறுகிறோம். ஆலோசனைக் கூட்டத்தில் கழக நிர்வாகிகளில் சிலர் சுட்டிக்காட்டியவாறு ஆங்காங்கே செய்யப்படவேண்டிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் தீர ஆராய்ந்து விரைவில் செயல்படுத்துவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றப் பொதுத் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் அதிமுக முழுமையான வெற்றியை ஈட்டுவதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து முழுமூச்சுடன் மேற்கொண்டு, வெற்றிக் கனியை பறிப்போம். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : executives ,AIADMK ,OPS , AIADMK administrators, OPS, Edappadi
× RELATED இரட்டை இலை சின்னம் வழக்கு இன்று விசாரணை..!!