×

பாலின மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறிய கான்ஸ்டபிள் 22 வயது பெண்ணை மணந்தார்

பீட்: பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு 22 வயது இளம்பெண்ணுடன் திருமணம் நடந்தது. மகாராஷ்டிரா மாநிலம் மாஜல்காவ் தாலுகாவில் உள்ள ராஜேகாவ் கிராமத்தை சேர்ந்தவர் லலிதா குமாரி சால்வே. 1988ம் ஆண்டு ஜூன் மாதம் பெண்ணாக பிறந்த இவருக்கு பெற்றோர் லலிதா குமாரி சால்வே என்று பெயர் சூட்டினர். லலிதா பின்னர் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலைக்கு சேர்ந்தார். அவர் பீட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் வேலை செய்தார்.
4 ஆண்டுகளுக்கு முன்பு லலிதாவின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. இதை உணர்ந்த அவர் மருத்துவ பரிசோதனை செய்தார். அப்போது அவருடைய உடலில் ஆணுக்கான அடையாளங்கள் காணப்பட்டன. ஆண்களுக்கு எக்ஸ் குரோமோசோம்களும், ஒய் குரோமோசோம்களும் இருக்கும். பெண்களை பொறுத்தவரை இரண்டு எக்ஸ் குரோமோசோம்கள் காணப்படும்.

ஆனால் லலிதாவின் உடலில் ஒய் குரோமோசோம்களும் காணப்பட்டன. எனவே அவர் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாற வேண்டும் என்று டாக்டர்கள் கூறினர். எனவே அறுவை சிகிச்சை செய்ய லலிதா முடிவு செய்தார். அதற்கு ஒரு மாதம் விடுப்பு வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கோரினார். மேலும் ஆணாக மாறிய பின்னர் தான் தொடர்ந்து கான்ஸ்டபிளாக வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார். ஆனால் பீட் மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் விடுப்பு வழங்க மறுத்துவிட்டனர்.
ஆண் போலீசாருக்கும் பெண் போலீசாருக்கும் தேவைப்படும் உடல் தகுதி உள்ளிட்ட தகுதிகள் வெவ்வேறானவை. எனவே ஆணாக மாறிய பின்னர் லலிதா போலீஸ் வேலையில் நீடிக்க முடியாது என்று உயர் அதிகாரிகள் கூறிவிட்டனர். இதனைத் தொடர்ந்து லலிதா மும்பை ஐகோர்ட்டை நாடினார். மும்பை ஐகோர்ட், மகாராஷ்டிரா மாநில நிர்வாக தீர்ப்பாயத்தை அணுகுமாறு உத்தரவிட்டது. இந்த நிலையில் அப்போதைய முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தலையீட்டின் பேரில், லலிதா அறுவை சிக்சிசை செய்ய அவருக்கு உள்துறை அமைச்சகம் விடுப்பு வழங்கியது. மேலும் ஆணாக மாறிய பின்னர் லலிதா கான்ஸ்டபிள் வேலையில் தொடரலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லலிதாவுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் லலிதா முழுமையாக ஆணாக மாறிவிட்டார். மேலும் ஆண் போலீஸ் கான்ஸ்டபிளாக வேலையை தொடர்கிறார். லலிதா என்ற தன்னுடைய பெயர் லலித் என்று மாற்றிக் கொண்டார். லலித் சமீபத்தில் அவுரங்காபாத்தை சேர்ந்த சீமா என்ற 22 வயது பெண்ணை திருமணம் செய்தார். உறவினர்களும் நண்பர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தான் இப்போது மகிழ்ச்சியுடன் வாழ்வதாக லலித் கூறினார்.
திருமணம் குறித்து லலித் கூறியதாவது: கடந்த  ஒரு வாரத்துக்கு முன்பு குடும்ப விழா ஒன்றில் சீமாவை சந்தித்தேன். அவரை பார்த்ததுமே பிடித்துவிட்டது. சீமாவை அணுகி அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தேன். சீமா என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து வைத்திருந்தார்.

ஆணாக மாறுவதற்காக ஓராண்டு காலமாக நான் நடத்திய போராட்டங்கள் பற்றியும் எனக்கு பாலியல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்தது குறித்தும் பல்வேறு பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சீமா கத்தரித்து தொகுத்து வைத்திருந்தார்.
அதையெல்லாம் என்னிடம் காட்டிய சீமா, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். அவரது குடும்பத்தினரும் எனது நிலையை புரிந்து கொண்டு சீமாவை எனக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்தனர். இரு குடும்பத்தாரும் பேசி முடித்து நிச்சயதார்த்தம் செய்து எங்களது திருமணம் முறைப்படி நடந்தது என்றார். லலித் சால்வேயின் தாய் கேசர்பாய் கூறுகையில், ‘‘லலித் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதை முதலில் நான் விரும்பவில்லை.

ஆனால், அவனது உண்மையான மனநிலை தெரிந்த பிறகு அவனது விருப்பத்துக்கு இடையூறாக இருக்க நான் விரும்பவில்லை. லலித்  இப்போது எனக்கு நல்ல ஆண் மகனாக கிடைத்திருக்கிறான். லலித்துக்கு திருமணம் நடக்குமா என்றெல்லாம் நான் கவலைப்பட்டேன். ஆனால், இப்போது எனக்கு சீமா மருமகளாக கிடைத்திருக்கிறாள். லலித்தை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த சீமாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

மணப்பெண்ணின் நம்பிக்கை:
புதுமணப்பெண்ணான சீமா கூறுகையில், ‘‘லலித் மூலம் நான் தாய்மை அடைவேன் என உறுதியாக நம்புகிறேன். லலித் தனக்கு மேற்கொள்ளப்பட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை குறித்த அனைத்து விவரங்களையும் என்னிடம் தெளிவாக கூறியிருக்கிறார். இந்த சமூகத்தினர் என்ன கூறுவார்கள் என தயங்காமல் தான் விரும்பியபடி வாழ அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளும், நடத்திய போராட்டங்களும் லலித் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. லலித்தை திருமணம் செய்து கொள்ளப் போவதாக எனது குடும்பத்தினரிடம் நான் கூறியபோது அதற்கு அவர்கள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை’’ என்றார்.

Tags : Constable ,sex transplant , Gender Transplant Surgeon, Male, Constable, Female
× RELATED நெல்லை தனிப்படை காவலர் மீது போக்சோவில் வழக்கு..!!