×

இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலை.யில் 93 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்

புதுடெல்லி:  டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் (இக்னோ) பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 93 வயது முதியவர் சிவசுப்பிரமணியன் என்பவர் மிக மூத்த வயது மாணவர் என்ற முறையில் பொது நிர்வாகத் துறை பாடப்பிரிவில் முதுகலை பட்டத்தை பெற்றார்.   தனது சாதனை குறித்து சிவசுப்பிரமணியன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 1940ம் ஆண்டு எனது பள்ளி படிப்பை முடித்தேன். பின்னர் டெல்லிக்கு எனது குடும்பம் குடிபெயர்ந்தது. அப்போது நான் வர்த்தக துறை அமைச்சகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தேன். பின்னர், பல்வேறு துறை தேர்வுகளை எழுதி அந்த துறையின் இயக்குனராக பொறுப்பேற்றேன். கடந்த 1986ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால், பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் நிறைவேறவில்ைல.  

பட்டபடிப்பை முடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் ஐநா சபை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனது பணிக் காலத்தில் பறிபோனது. எனது மனைவி உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருந்தாள். அப்போது வந்த டாக்டரை சற்று நேரம் என் மனைவியை கவனிக்க சொல்லி விட்டு இக்னோ பல்கலையில் பட்டப்படிப்புக்கான விண்ணப்பத்தை வாங்கி விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு எனது மனைவி இறந்த அதேவேளையில் எனது பட்டப்படிப்பை முடித்தேன். தற்போது,  முதுகலை பட்டமும் பெற்று விட்டேன். அடுத்து எம்பில் படிக்க விரும்புகிறேன். எனது பேத்தி வேறு இளைஞருக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டி பறிக்காதீர்கள் என கூறியதால் ஏதாவது குறுகிய கால படிப்பை முடிக்க தீர்மானித்து உள்ளேன் என்றார்.


Tags : senior ,Indira Gandhi Open University , Indira Gandhi Open University, Masters Degree, Elderly
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...