×

குடியுரிமை சட்ட திருத்தத்தை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற முடியாது

* மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது * சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி விளக்கம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசால் தீர்மானம் நிறைவேற்ற முடியாது. அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் கூறினார்.மத்திய பாஜ அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தையும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆரையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி 2 கோடிக்கும் மேற்பட்டவர்களிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இந்தநிலையில்தான் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த தடியடிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ்பெற வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக பிரச்னை எழுப்பி, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்தார்.

ஆனால், தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற மறுத்து விட்டது.இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ் பேசும்போது, “மத்திய அரசு என்ன செய்தாலும் அமைதியாக இருக்கிறீர்கள். மத்திய அரசுக்கு பயந்துதான் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவில்லை” என்றார்.இதற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசியதாவது:
இதையே சொல்லி, சொல்லி நீங்கள் நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சொல்லுங்கள், நாங்கள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றுசுட்டிக்காட்டுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். அதை விட்டுவிட்டு, மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான, அவதூறான செய்தியை சொல்லி இன்றைக்கு நல்ல அமைதியாக வாழ்கின்ற நம்முடைய மாநிலத்தில் குந்தகம்

ஏற்படுகின்ற நிலையை ஏற்படுத்துகிறீர்கள். என்ன சொல்லுங்கள், யார் பாதித்து இருக்கிறார்கள், விளக்கம் சொல்லுங்கள், நான் பதில் சொல்கிறேன்.மனோ தங்கராஜ் (திமுக): பாதிப்பு இருப்பதால் தான் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

முதல்வர் எடப்பாடி: இப்போது நீங்கள் (திமுக) வெளிநடப்பு செய்தீர்கள். என்ன சொன்னீர்கள், இரட்டை குடியுரிமை வழங்கக்கூடிய அதிகாரம் மத்தியிலே இருக்கிறது என்று சொன்னீர்கள். அப்படி பார்த்தால், குடியுரிமை திருத்த சட்ட விவகாரமும்

மத்திய அரசிடம் தான் இருக்கிறது, மாநிலத்தில் அல்ல. நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டு வெளியே சென்றீர்கள். மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி நடிக்கவில்லை.அதேபோன்று, விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டி அதிகமாகி விட்டது என்கிறீர்கள். வட்டி சதவிகிதத்தை பற்றி  இங்கே குறிப்பிட்டார்கள். உங்களுடைய (திமுக) நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்குதானே அமர்ந்திருக்கிறார்கள், குரல் கொடுங்கள், அதற்குத்தானே உங்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இங்கு பேச வேண்டியதை இங்கு பேசலாம். அங்கு பேச வேண்டியதை அங்கு பேசலாம். அதுதான் நடக்கும். இங்கு பேசி பிரயோஜனம் இல்லை. விவசாயிகள் பாதிக்கப்படுகின்ற துன்பத்தை, வட்டியை குறைக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொன்னீர்கள் என்றால், அது நிறைவேறும். இங்கு சொன்னால், நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் கேட்கத்தான் முடியும். அதை நிறைவேற்ற முடியுமா? நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசுதான்.இவ்வாறு முதல்வர் பதில் அளித்து பேசினார்.

* திமுக: மத்திய அரசுக்கு பயந்துதான் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரவில்லை.
* எடப்பாடி: மாநிலத்திற்கு அதிகாரம் இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று சொல்லி நடிக்கவில்லை. நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசுதான்.

Tags : Citizenship, Amendment, Resolution, passed
× RELATED மீண்டும் வாக்குச் சீட்டு முறை...