×

காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்தால் 2025ல் இந்தியா-பாக். அணு ஆயுத போர்

* இருதரப்பிலும் 12.5 கோடி மக்கள் பலியாக வாய்ப்பு
* ‘முனிச்’ பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையில் ‘பகீர்’

புதுடெல்லி: காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்தால் 2025ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் இருதரப்பிலும் 12.5 கோடி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது என ‘முனிச்’ பாதுகாப்பு மாநாட்டு அறிக்கையில் ‘பகீர்’ தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், சக்திவாய்ந்த உலகளாவிய தலைவர்கள் ஜெர்மனியின் முனிச் நகரில் அமைதி மற்றும் ராஜதந்திரம் பற்றி விவாதிக்க ஒரு மாநாடு நடத்தப்படும். இம்மாநாடு அதிகாரமிக்க ஒன்றாக கருதப்படவில்லை என்றாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் சர்வதேச ரகசியங்கள் குறித்தும் ராஜதந்திர வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். முனிச் நகரில் முடிந்த மாநாட்டை தொடர்ந்து, ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்தியாவின் காஷ்மீர் பிராந்தியத்தில் எந்தவொரு தீவிரவாத தாக்குதல் ஏற்பட்டாலும், அது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ராணுவ மோதலின் உச்சத்தை தொடும்.

அதனால் ஏற்படும் தீவிரமான அபாயத்தால் அணுஆயுத போர் ஏற்படும். தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அணுசக்தி போர் 2025ல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் 50 முதல் 125 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம் - 5 முதல் 12.5 கோடி) மக்கள் கொல்லப்படக்கூடும். இந்தியா தனது அணுசக்தி தேவையை நிறைவு செய்திருந்தாலும், அதேநிலையில் பாகிஸ்தானும் தனக்கான அணுசக்தி தேவையை ஏற்படுத்தி வருகிறது. மோசமான பாதுகாப்பு நிலைமைக்கு இருநாடுகளும் முன்னேறி செல்கின்றன. ஆப்கானிஸ்தானின்  பாதுகாப்பு நிலைமை நிலையற்றதாகவே உள்ளது. பிப். 14, 2019, புல்வாமா தாக்குதலுக்கு பின், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்துள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ தாக்குதல்கள் முன்னெப்பொழுதும் இல்லாத நிலையில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தலா 100 முதல் 150  அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது.

இரு  நாடுகளுக்கும் இடையிலான அணு ஆயுத போர் ஏற்பட்டால் 15 முதல் 100 கிலோடோன் அணு  ஆயுதங்கள் பயன்படுத்தப்படும். இதனால் 16  முதல் 36 மில்லியன் டன் கறுப்பு  கார்பன் புகை ஏற்படும். சூரிய ஒளியில் 20-35 சதவீதம்  சரிவு ஏற்படும். நிலத்தில் உற்பத்தித்திறனில் 15-30 சதவீதம் சரிவும், கடல்களில்  5-15 சதவீதம் மாசு ஏற்படும். மொத்தமாக 50 முதல் 125 மில்லியன் மக்கள் உடனடியாக பலியாவார்கள். எவ்வாறாயினும், இஸ்லாமாபாத் தீவிரவாதத்தை அரசின் கொள்கை கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. இந்தியாவை குறிவைப்பதில் பாகிஸ்தானை தளமாக தீவிரவாத குழுக்கள் பயன்படுத்துகின்றன. ஆப்கானிஸ்தானில் தனது துருப்புக்களைக் குறைக்க அமெரிக்கா முற்படும்போது, மேற்கத்திய தீவிரவாத எதிர்ப்பு முயற்சிகளில் நீண்டகாலமாக முக்கிய பங்கைக் கொண்டிருந்த பாகிஸ்தானின் தீவிரவாத குழுக்கள் மீண்டும் தங்களது வலிமையை ஏற்படுத்திக் கொள்ளும்.

இந்தாண்டில் கவனிக்கப்பட வேண்டிய 10 மோதல்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் பாரசீக வளைகுடா ஆகியவற்றுடன் காஷ்மீர் விவகாரமும் இணைந்துள்ளது. காஷ்மீர் பல ஆண்டுகளாக சர்வதேச கண்காணிப்பில் இருந்தாலும், தற்போதைய நிலைமை கூடுதலாக விரிவடைந்துள்ளது. சர்ச்சைக்குரிய எல்லையில் அமைதியைக் காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு சக்திகள் தங்கள் முழு தாக்குதலையும் தொடர வேண்டியிருக்கும். அணுசக்தி மோதல் பட்டியலில் வட கொரியா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் சம்பந்தப்பட்ட மோதல்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ‘முனிச்’ பாதுகாப்பு மாநாட்டு அறிக்கை குறித்து இந்திய அதிகாரிகளிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் கிடைக்கவில்லை. இருந்தும், பாகிஸ்தானில் பணியாற்றிய இந்தியாவின் முன்னாள் தூதர் ராஜீவ் டோக்ரா, முன்ச் பாதுகாப்பு அறிக்கை குறித்து கூறுகையில், “கடந்த ஆறு மாதங்களாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த அறிக்கையைத் தயாரித்த மக்கள் உண்மையான பிரச்னைக்கு தங்கள் மனதைப் பயன்படுத்தவில்லை. இது இம்ரான்கான் தரப்பில் நிதியுதவி செய்த பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தீவிரவாதம்” என்றார். கடந்த சில நாட்களுகளுக்கு முன் 40  சிஆர்பிஎப் வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் பலியான ஓராண்டு நினைவு அஞ்சலி  செலுத்தப்பட்ட நிலையில், ஒரு சில நாட்களில் இந்த அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : terrorist attack ,Kashmir ,war , Terrorist Attack, India-Pak., Nuclear War
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...