×

சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன: தரமின்றி அமைக்கப்படும் சிறுபாலங்கள்: வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கும் அவலம்

காரைக்குடி: காரைக்குடி நகர் பகுதியில் உள்ள சிறுபாலங்கள் தரமற்றவைகளாக அமைக்கப்பட்டுள்ளதால் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. வெளியே தெரியும் கம்பிகள் குத்தி வாகனங்களின் டயர்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கழிவுநீர் கால்வாய்கள் சாலைகளை கிராஸ் செய்யும் இடங்களில் சிறுபாலங்கள் அமைக்கப்படுகிறது. அந்த வகையில் நகராட்சி பகுதிகளில் மட்டும் 300க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் உள்ளன. 3 மீட்டர் முதல் 15 மீட்டர் வரை சாலையின் அகலத்தை பொறுத்து பாலங்கள் அமைக்கப்படுகிறது. பாலங்கள் கட்டுமானத்திற்கு ஏற்ப நகராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது. தண்ணீர் செல்லும் அளவினை கணக்கில் கொண்டு பாலங்கள் கட்ட வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் செல்லும் பகுதி என்றால் ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் உள்கூடு அகலம் இருக்க வேண்டும். இரண்டு புறங்களும் ஒன்றரை அடியில் சுவர் கட்ட வேண்டும். அதன் மேல் ஒன்று முதல் ஒன்றரை அடி கணத்துக்கு கான்கிரீட் போட வேண்டும்.  கம்பிக்கு மேல் மற்றும் கீழ் 4 இஞ்ச் திக்னஸ்க்கு கான்கிரீட் இருக்க வேண்டும்.

பாலத்தின் இருபுறங்களிலும் சாலையை இணைக்கும் வகையில் சாய்தளம் அமைக்க வேண்டும். ஆனால் தற்போது இது போன்ற முறையான நடைமுறைகளை கடைபிடிப்பது கிடையாது. இதனால் பாலத்தின் மேல் பகுதி பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் பாலத்தின் நடுவே ஒருஆள் உள்ளே விழும் அளவிற்கு உடைந்து அதில் கல் அல்லது கம்புகளை போட்டு முடி வைக்கும் நிலை உள்ளது. பல்வேறு இடங்களில் பாலத்தையும் சாலையையும் இணைக்கும் சாய்தளம் முறையாக இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. பலஇடங்களில் கான்கிரீட் கொண்டு சாய்தளம் அமைக்காமல் மண்கொண்டு நிரப்பி உள்ளனர். பாலத்தில் வெளியே தெரியும் கம்பிகள் வாகனங்களை தினமும் பதம் பார்ப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பல லட்சம் வரை செலவு செய்து கட்டப்படும் பாலங்கள் முறையாக அமைப்பது இல்லை. கட்டுமானத்தில் பாதி தொகை கமிஷனாக கொடுத்துவிட்டு மீதம் உள்ளதற்கு பெயர் அளவில் பணிகளை பார்த்துள்ளனர். பாலத்திற்கும் சாலைக்கும் இடையே சாய்தளம் முறையாக இல்லாததால் வாகனத்தில் செல்லும் போது வேகத்தடையில் செல்வது போல் உள்ளது. கம்பிகள் குத்தி வாகனங்களில் டயர்கள் கிழிந்து போவது வாடிக்கையாகி வருகிறது என்றனர்.


Tags : Minor , Karaikkady, low quality, set up, small children, misery
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...