×

சென்னை அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கு: 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: சென்னை அயனாவரத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவர் மேல்முறையீடு செய்துள்ளார். சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது. மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த நிலையில், இவர்களில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற உமாபதி என்பவர், தண்டனையை நிறுத்திவைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். எலக்ட்ரீசியனாக பணியாற்றிய தன்னை, வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் பிளம்பர் என குறிப்பிட்டுள்ளதாக அதில் அவர் கூறியுள்ளார். முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் இடம்பெறவில்லை என்றும், மேல்முறையீட்டு மனுவில் அவர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் முன்னுக்குப்பின் முரணான வாக்குமூலத்தை நீதிமன்றம் நிராகரித்திருக்க வேண்டும் என்று மனுவில் உமாபதி கூறியுள்ளார். தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகபட்ச தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், அதுவரை ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் உமாபதி கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Madras Ayanavaram ,High Court , Ayanavaram, child, abuse, punishment, the Supreme Court, Appeal
× RELATED ஈஷா யோகா மையத்தில் பணியாற்றிய 6 பேர்...