×

சிவராத்திரிக்கு தயாராகும் தென்மாவட்டக் கோயில்கள்

சிவகங்கை: வரும் 21ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, தென்மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோயில்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.  தென்மாவட்ட மக்களின் மண் சார்ந்த பாரம்பரிய வழிபாட்டில் முன்னணி வகிப்பது குலதெய்வ வழிபாடு. ஆண்டுதோறும் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி பெருவிழா சிவன் கோயில்களில் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்தின் குலதெய்வ கோயில்களிலும் கொண்டாட்டத்தின் உச்சம் தொடுகிறது. நடப்பாண்டிற்கான மகா சிவராத்திரி திருவிழா பிப். 21ல் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான  குலதெய்வக் கோயில்கள் உள்ளன. அன்றாட வழிபாடுகள் நடந்தபோதும், இக்கோயில்களில் சிவராத்திரி தினத்தில் நடக்கும் சிறப்பு பூஜை மகத்தானது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சிவராத்திரி திருநாளுக்கு தங்களது குலதெய்வங்களை வணங்கிட மக்கள் கூடுகின்றனர்.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் கிராமத்தில் உள்ள பெரியகருப்பணசுவாமி மீனாள் கோயில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், மாணிக்கம், உதயகுமார் கூறும்போது, ‘‘மாசி 9ம் தேதி கொண்டாடும் இந்த மாசி களரி விழாவான சிவராத்திரிக்கென தென்மாவட்டம் முழுவதும் கடந்த இரு வாரங்களாகவே சுவாமி சிலைகளை சுத்தப்படுத்துவது, கோயிலை வெள்ளையடித்து புதுப்பிப்பது, பந்தல் அமைப்பது என  குலதெய்வ கோயில்களை தயார்ப்படுத்தும் பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது,’’ என்றனர்.

மகா சிவராத்திரியின் கதை
மகா சிவராத்திரிக்கான ஆன்மிகக்கதை அற்புதமானது. அதாவது, பிரளய காலத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்த நிலையில், இரவில் அம்பிகையான உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜித்தார். நான்கு ஜாமங்களும் இரவு முழுக்க ஆகமம் மாறாமல் அர்ச்சித்தார். முடிவாக அன்னை, ‘‘சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயம் வரையிலும் சிவ பூஜை செய்கிற எவருக்கும் அத்தனை பாக்கியங்களைத் தந்து, முடிவில் மோட்சமும் வழங்கிட அருள் புரிய வேண்டும்’’ என்று வேண்டினார். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்’ என அருள் புரிய, இந்த அற்புத மகா சிவராத்திரி கிடைத்திருக்கிறது. இந்நாளில் விழித்து வணங்குதல், அத்தனை பலன்களையும் அள்ளித்தரும்.


Tags : temples ,Shivaratri , Thenmawatta, temples, ready , Shivaratri
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு