×

எஸ்எஸ்ஐயை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான 2 தீவிரவாதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்

சேலம்: குமரி எஸ்எஸ்ஐ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகள், பாளை சிறையில் இருந்து நேற்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த ஜனவரி 8ம் தேதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்எஸ்ஐ. வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தவுபிக்(28), அப்துல் சமீம்(32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத கும்பலை சேர்ந்த இவர்கள் இருவரும் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் இவர்கள் இருவர் மீதும் உபா சட்டமும் பாய்ந்தது.

இந்நிலையில் இந்த தீவிரவாதிகள் இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் இருந்து பாதுகாப்பு காரணங்களுக்காக, சேலம் மத்திய சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை காலை 6 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீவிரவாதிகள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டனர். ஆனால் சேலம் வராமல் வழியில் உள்ள மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்று  காலை 6 மணிக்கு மதுரை மத்திய சிறையில் இருந்த இரண்டு தீவிரவாதிகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர். காலை 11 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் உயர்பாதுகாப்பு தொகுதியில் இருவரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டனர்.


Tags : militants ,SSI ,Salem ,jail ,prison ,terrorists , SSI, shot dead, arrested, 2 terrorists, Salem prison, change
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை