×

மேக் இன் இந்தியா திட்டம் 30,000 கோடி மதிப்பு டெண்டர்கள் ரத்து

புதுடெல்லி: இந்திய நிறுவனங்கள் பங்கேற்ற இயலாத வகையில் வெளியிடப்பட்ட ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும் மேக் இன் இந்தியா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் பொருட்கள் உற்பத்தியை ெசய்து வருகின்றன.  இந்நிலையில், இந்த திட்டத்தில் வந்த ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைப்பின் செயலாளர் குருபிரசாத் மகாபத்ரா கூறுகையில், ‘‘சில பாதகமான நடைமுறைகள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, ஏறக்குறைய ₹30,000 கோடி மதிப்பிலான டெண்டர்களை ரத்து செய்துள்ளோம். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறை பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக எளிய முறையில் தொழில் தொடங்குதல் மற்றும் அந்நிய நேரடி முதலீடு விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுபோன்ற செயல்பாடுகள் அதற்கு எதிராக உள்ளன.’’ என்றார். மத்திய அரசு துறைகள் மற்றும் அதன் அலுவலகங்கள், அரசு தன்னாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறைகளும் உள்நாட்டு பொருட்களை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட டெண்டர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் பலன் அடையும்  வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இது மத்திய  அரசின் மேக் இந்தியா திட்டத்துக்கு எதிராக உள்ளதால் இவை ரத்து  செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : tenders ,India , Make ,India , Cancel ,tenders
× RELATED மும்பையில் உள்ள நவபாரத் கெமிக்கல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து!