இந்தியாவுடன் டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணியில் மீண்டும் டிரென்ட் போல்ட்: அஜாஸ், ஜேமிசனுக்கும் வாய்ப்பு

வெலிங்டன்: இந்திய அணியுடன் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணியில், அனுபவ வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.இந்தியா - நியூசிலாந்து அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் பிப். 29ம் தேதி தொடங்கி நடைபெறும்.இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின்போது கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த டிரென்ட் போல்ட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சமீபத்தில் இந்திய அணியுடன் நடந்த ஒருநாள் தொடரில் அறிமுகமான இளம் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன், டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் புதுமுக வீரராக இடம் பிடித்துள்ளார். லெக் ஸ்பின்னர் டாட் ஆஸ்டிலுக்கு பதிலாக மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான அஜாஸ் பட்டேலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.நியூசி. டெஸ்ட் அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் பிளண்டெல், டிரென்ட் போல்ட், கோலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டாம் லாதம், டாரில் மிட்செல், ஹென்றி நிகோல்ஸ், அஜாஸ் பட்டேல், டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே.வாட்லிங்.

Related Stories:

>