×

கடனை திருப்பி தராதவரை கொன்ற கார்பென்டருக்கு ஆயுள் சிறை

சென்னை: கடனை திருப்பி தராதவரை கொலை செய்த வழக்கில் கார்பென்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோட்டூர்புரம் நாயுடு தெருவை சேர்ந்தவர் சேகர். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர், கேட்டூர்புரத்தை சேர்ந்த ரவி என்பவருடன் சேர்ந்து கார்பென்டர் வேலை செய்து வந்தார்.இந்தநிலையில் சேகர், ரவியிடம் ₹2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதனை சில நாட்கள் கழித்து ரவி கேட்டுள்ளார். அப்போது, தன்னிடம் பணம் இல்லை, வந்ததும் கொடுத்து விடுகிறேன் என்று சேகர் தெரிவித்துள்ளார்.கடந்த 18.9.2010 அன்று மதியம் ரவி, சேகரின் வீட்டிற்கு வந்து, கொடுத்த பணத்தை திருப்பி கொடு என்று சண்டை போட்டுள்ளார். அவர் தர மறுத்ததால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரவி, உன்னை சும்மா விட மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர், மீண்டும் இரவு சேகர் வீட்டிற்கு வந்து ரவி சண்டை போட்டுள்ளார். அப்போது, மறைத்து வைத்திருந்த கட்டையை எடுத்து சேகரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து சேகரின் மனைவி சரஸ்வதி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.சமீனா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் நாராயணராவ் ஆஜராகி வாதிட்டார்.  அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கொலை செய்த ரவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. என்று கூறி தீர்ப்பளித்தார்.



Tags : prison ,Carpenter , Kill, repay, Carpenter faces ,life imprisonment
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு