×

கட்டுமான நிறுவனர் வீட்டில் 131 சவரன் கொள்ளை காரின் டயரை வைத்து 3 பேர் அதிரடி கைது: பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: வளசரவாக்கத்தில் கட்டுமான நிறுவனர் வீட்டில் 131 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். தப்பிய ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை வளசரவாக்கம் தேவி தேவிகுப்பம், ராதா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (52), கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு விட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 131 சவரன் நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அமுதா, கோவிந்தராஜ், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, கோயம்புத்தூரை சேர்ந்த முருகானந்தம், மாங்காடு அடுத்த கோவூரை சேர்ந்த ஆனந்த், சங்கரன்கோவிலை சேர்ந்த சங்கர பாண்டியன் ஆகிய 3 பேரை வளசரவாக்கம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 65 சவரன் நகைகள், ₹4 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஜீவானந்தம் என்பவரை தேடி வருகின்றனர்.

இந்த வழக்கில் கொள்ளையர்கள் சிக்கியது குறித்து போலீசார் கூறியதாவது:  கொள்ளை சம்பவம் நடந்த வீடு மற்றும் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு காரில் சந்தேகத்திற்கிடமாக 4 பேர் வந்து செல்வது தெரியவந்தது. அவர்களின் புகைப்படங்கள் மற்றும் காரின் பதிவு எண்ணை வைத்து  சுமார் 10 கி.மீ தூரத்திற்கு 400 கேமரா காட்சிகளை கண்காணித்தபோது கோயம்பேடு பகுதியில் கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் நிறுத்தப்பட்டது தெரியவந்தது.
அந்த காரின் வைத்து, அதன் உரிமையாளர் குறித்து ஆய்வு செய்தபோது, அது போலியான எண் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த காருக்கு புதிதாக டயர் மாற்றப்பட்டிருந்ததை வைத்து, சுற்றுப் பகுதியில் உள்ள டயர் கடைகளில் விசாரித்தபோது ஆனந்த் என்பவர் காரின் டயர் மாற்றியதாக தெரியவந்தது. அதை வைத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இதில்  ஆனந்த் வளசரவாக்கத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். போதிய வருமானம் இல்லாத காரணத்தால் கடையை மூடி விட்டு மாங்காடு அடுத்த கோவூரில் காய்கறி கடை நடத்தி கொண்டு அங்கேயே தங்கி உள்ளார். மேலும் கார்களை வாங்கி விற்கும் தொழிலை செய்து வந்துள்ளார். அதிலும், வருமானம் போதவில்லை என கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, கைதாகி மதுரை சிறையில் இருக்கும்போது முருகானந்தம், சங்கரபாண்டியன், ஜீவானந்தம் ஆகியோருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. சிறைக்குள் இவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசியபோது, வளசரவாக்கத்தில் வசதியான வீடுகள் உள்ளன. அங்கு கொள்ளையடிக்கலாம் என திட்டம் தீட்டி கொடுத்துள்ளார். இதையடுத்து மூன்று பேரையும் கோவூரில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து அங்கு தங்க வைத்துள்ளார். சம்பவத்தன்று காரை எடுத்துக்கொண்டு திருட்டு தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என போரூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு இந்த வழியாக வரும்போது ஆறுமுகம் அவரது வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்வது தெரியவந்தது. அங்கேயே காரை நிறுத்தி விட்டு தங்களது திருட்டை தொடங்கி உள்ளனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் எகிறி குதித்து உள்ளே சென்றபோது அங்கிருந்த நாய் குறைத்துள்ளது. கையில் வைத்திருந்த இறைச்சியை நாய்க்கு போட்டதால், குரைப்பதை நிறுத்தி விட்டது. இதையடுத்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணத்தை கொள்ளையடித்துள்ளனர். சிறிது நேரத்தில் வீட்டின் உரிமையாளர் திரும்பி வரும் சத்தம் கேட்டதையடுத்து வீட்டின் பின்பகுதி வழியாக தப்பி சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : tire building ,shaving robbery ,operation ,arrests ,home ,robbery ,construction founder , 131 shaving robbery, construction,operation
× RELATED ரம்ஜான் பண்டிகை: அரசு போக்குவரத்துக்...