×

திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்

புழல்:செங்குன்றம் கூட்டுசாலையில் உள்ள ஆலமரம் பகுதி  திருவள்ளூர் நெடுஞ்சாலை ஓர மழைநீர் கால்வாயில் கழிவு நீர் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த பொத்தூர் கலைஞர் கருணாநிதி நகர் - காந்திநகர் சந்திக்கும் திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை பகுதியிலிருந்து சோலையம்மன் நகர், காந்திநகர், ஆலமரம், திருவள்ளூர் கூட்டு சாலை, நேதாஜி சிலை அருகே வரை சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இந்த சாலை ஓரங்களில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட பலர் மேற்கண்ட மழைநீர் கால்வாய்களில் கழிவுநீரை விடுவதால் மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது, திருவள்ளூர் நெடுஞ்சாலை அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் இந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் கழிவுநீரில்  நடந்து செல்வதால் தொற்று நோய் பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் மீதும், சாலையோரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீதும் கழிவுநீர் வாரி இறைப்பதால், அவர்கள் அணிந்திருக்கும் உடைகள் நாசமாகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் அலுவலகம் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து உடைப்பு ஏற்பட்டுள்ள கால்வாயை உடனே சரி செய்து சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். மழைநீர் கால்வாயில் கழிவுநீர் விடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் வசூலிக்க வேண்டும். அப்படி செய்தால் யாரும் மழைநீர் கால்வாயில் கழிவுநீர்விட மாட்டார்கள். எனவே, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : river ,highway ,Tiruvallur ,Thiruvallur Highway Six , Thiruvallur, Highway, Six-sewer
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை