×

வரவேற்பு விழாவில் நடனமாடிய மாப்பிள்ளை மயங்கி விழுந்து பலி: மணப்பெண் கதறல்

திருமலை: காலையில் திருமணம் நடந்து மாலையில் வரவேற்பு விழாவில் நடனமாடிய புதுமாப்பிள்ளை மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனால் புதுப்பெண் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பிராமணகல்லி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ். இவர் துபாயில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், சாலூரா கிராமத்தை சேர்ந்த சோப்னா என்பவருக்கும் திருமணம் செய்ய பெரியோர்கள் முடிவு செய்தனர். இதற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. பிப்.15ம்தேதி (நேற்று முன்தினம்) திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.  இதையடுத்து திருமணத்திற்காக கணேஷ் கடந்த வாரம் துபாயில் இருந்து நிஜமாபாத் வந்தார். இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று முன்தினம் போதனில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கணேஷ்-சோப்னா திருமணம் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டு பலர் ஆடிப்பாடினர். இதை பார்த்துக்கொண்டிருந்த புதுமாப்பிள்ளை கணேசுக்கும் டான்ஸ் ஆட ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் தனது புது மனைவியான சோப்னாவுடன் சேர்ந்து நடனமாடினார். சிறிது நேரம் மட்டுமே நடனமாடிய கணேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த புதுப்பெண் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது,  கணேஷ் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து போதன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலையில் திருமணம், மாலையில் புதுமாப்பிள்ளை இறந்த சம்பவத்தால் புதுப்பெண் சோப்னா உள்பட அனைவரும் கதறி அழுதனர்.

Tags : groom ,reception ,groom dances , Welcome ceremony, groom sacrifice, brides
× RELATED செய்யாறு அருகே இன்று நடக்கும் திருமண...