×

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கும் விவகாரம்: மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

புதுடெல்லி: சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வைத்த கோரிக்கை குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து மதிமுக தரப்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அன்புள்ள வைகோ, 27.11.2019 அன்று, நாடாளுமன்ற மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில், உச்சநீதிமன்றக் கிளையை, சென்னையில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தீர்கள். அதுகுறித்து சில விளக்கங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அரசமைப்புச் சட்டத்தின் 130வது பிரிவின்படி, உச்சநீதிமன்ற அமர்வு டெல்லியில் நடைபெறலாம். அல்லது காலத்துக்கு ஏற்ற வகையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்மானிக்கின்ற, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் வேறு இடங்களிலும் நடைபெறலாம்.

கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து உச்சநீதிமன்றக் கிளையை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவிட வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சட்ட ஆணையத்தின் 229வது அறிக்கையின்படி, உச்சநீதிமன்றத்தின் சுற்று அமர்வுகள், வடபகுதிகளுக்காக டெல்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை, ஹைதராபாத், கிழக்கில் கொல்கத்தா, மேற்கில் மும்பை ஆகிய இடங்களிலும் நடத்தலாம் என பரிந்துரை செய்துள்ளது. ஆனால் அதற்கு உச்சநீதிமன்றம் இசைவு அளிக்கவில்லை. பல்வேறு காலக்கட்டங்களில் மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டபோதும் அவர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 36/2016 ரிட் மனு, தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்க நீதிப் பேராணை கோரிய வழக்கில் 13.07.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, இந்தப் பிரச்னையை அரசு அமைப்புச் சட்ட அமர்வின் விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளது. அந்த வழக்கு, தற்போது, உச்சநீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Ravi Shankar Prasad Ravi Shankar ,Supreme Court Branch ,Chennai ,branch , Chennai, Supreme Court Branch, Ravi Shankar Prasad, Vaiko
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...