×

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்தும் சமூக விரோத கும்பல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் எழில்மிகு தோற்றமாக விளங்குவது பிரசித்தி பெற்ற ஜவ்வாது மலை பகுதி. மலைகளின்  இளவரசியாக ஏலகிரி மலையும், இளவரசனாக ஜவ்வாது மலையும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த ஜவ்வாது மலை பகுதி பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை ஆகும். இந்த பகுதியில் புதூர்நாடு, புக்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ளது. இதில் மொத்தம் 35 கிராமங்களும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிரதான தொழிலாக விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மலையை காவல் காப்பவர்கள் என்பதால் மலையாளிகள் என்று அரசால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காடு செழித்தால் நாடு வளரும் என்று அரசு அறிவித்து வருகிறது. மேலும், காடுகளை மேம்படுத்த தமிழக அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வனத்துறையின் சார்பில் காட்டுப்பகுதியில் மரங்களை நட்டு மரங்களை பாதுகாத்து வருகின்றனர்.

அவ்வாறு, பாதுகாக்கப்பட்டு வரும் மரங்களை சமூக விரோதிகள் ஜவ்வாது மலைப்பகுதியில் பட்டா நிலம் மற்றும் வனப்பகுதியில் உள்ள தரம் வாய்ந்த காட்டு மரங்களை அதிக அளவில் வெட்டி கடத்தி வருகின்றனர். ஒரு காலத்தில் சந்தன காற்று வீசும் மலையாக இருந்த ஜவ்வாது மலையை சில சமூக விரோதிகளால் சந்தன மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு இப்போது வாசனைக்கு கூட சந்தன மரங்கள் இல்லாமல் போய்விட்டது. மேலும், ஜவ்வாது மலையை மேம்படுத்த தற்போது வனத்துறையினர் ஆங்காங்கே மலைப் பகுதிகளில் சந்தன மரங்களை நட்டு வருகின்றனர். அந்த மரங்கள் தரத்திற்கு வருவதற்குள் அதனையும் சமூக விரோத கும்பல் வெட்டி கடத்துகின்றனர்.

இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு உத்திகள் மற்றும் சோதனை சாவடி அமைத்து கண்காணித்து வந்தாலும், அதையும் மீறி மலைப்பகுதியில் உள்ள காட்டு மரங்களை சமூக விரோத கும்பல் வெட்டி கடத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. அவ்வாறு வெட்டப்படும் மரங்களை திருப்பத்தூரில் உள்ள மர மண்டிகளில் பதுக்கி வைத்து அதனை கள்ளத்தனமாக விற்பனை செய்து பலர் லட்சாதிபதிகளாகவும்,  கோடீஸ்வரர்களாகவும் உலா வருகின்றனர். இதில் அதிகாரிகளின் ஆசியோடும் ஒரு சிலர் மரம் வெட்டி கடத்துதல் போன்ற சம்பவங்கள் இன்றளவும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்க கலெக்டர் மற்றும் எஸ்பி நடவடிக்கை மேற்கொள்ளும் கும்பல் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், மர கடத்தலை தடுக்க வனத்துறை சார்பில் தனிக்குழு அமைத்து காடுகளை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர்.

இந்நிலையில், நேற்று ஜவ்வாது மலை புதூர்நாடு அடுத்துள்ள மலையாண்டிபட்டி கிராமத்தில் அரசு தரிசு நிலத்தில் இருந்த தரம் வாய்ந்த பலா மரம் மற்றும் தரம் வாய்ந்த காட்டு மரங்களை இயந்திரம் மூலம் வெட்டப்படுவதாக அப்பகுதி மக்கள் விஏஓ சையத் அத்திக்கிடம் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 10க்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் மரங்களை வெட்டி கடத்தி கொண்டிருந்தனர். அதிகாரியை  பார்த்தவுடன் அந்த கும்பல் மின்னல் வேகத்தில் காட்டுப்பகுதிக்குள் ஓடி தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து, விஏஓ சையத் அதிக் நேற்று திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(40) என்பவர் மரம் வெட்டி கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு ராமலிங்கத்தை தேடி  வருகின்றனர். மேலும், மலையை பாதுகாக்க வேண்டியவர்களே மரம் வெட்டும் சம்பவங்களில் ஈடுபட்டது, வேலியே பயிரை மேய்வதாக மலை கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : gangs ,mountain range ,district ,Tirupattur , Tiruppattur
× RELATED விஐபிக்காக குற்றவாளிகள் குண்டர்...