×

ராஜபாளையத்தில் 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத பூங்கா

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டி முடிக்கப்பட்ட பூங்கா இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பூங்காவினுள் அடர்த்தியாக முட்புதர்கள் வளர்ந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ராஜபாளையம் 42வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.ஆர். நகர் பகுதியில் கடந்த 2015-16ம் ஆண்டு, நகராட்சி சார்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 3லட்சம் மதிப்பீட்டில் பசுமை வெளிப்பூங்கா அமைக்கப்பட்டது. உள்பகுதியில் செயற்கை நீரூற்று, புல்தரை, நடைபாதை, அலங்காரச்செடிகள், வண்ண விளக்குகள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இது வரை இந்த பூங்கா திறப்பு விழா காணாமல் உள்ளது. இதனால் காட்சிப் பொருளான பூங்கா முழுவதும், தற்போது முட்புதர்களாக காட்சியளிக்கிறது. மேலும் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் அடர்ந்து வளர்ந்துள்ள செடிகளுக்குள் புதைந்து கிடக்கிறது. எனவே, இப்பகுதியில் வசிப்போர் விடுமுறை நாட்களில் பொழுது போக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கண்ணன்ராஜா கூறுகையில், நகரின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் இந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கிற்காக கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்த பூங்கா அமைக்கப்பட்டது. இதன் உள்ளே 2 ஊஞ்சல்கள், சிறுவர்கள் சறுக்கி விளையாட 2 உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள், பெரியவர்கள் அமர இருக்கைகள் என பல லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை இந்த பூங்கா மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. மேலும் பராமரிப்பும் இதுவரை செய்யப்படவில்லை. இதனால் பூங்கா முழுவதும் புதர்கள் வளர்ந்து விஷஜந்துகளின் கூடாரமாகி விட்டது. எனவே, பொதுமக்கள் அருகில் செல்ல அச்சப்படுகின்றனர். விளையாட்டு உபகரணங்களும் சேதமடைந்து வருகிறது. பல உபகரணங்கள் பார்க்க முடியாத அளவு செடிகளுக்குள் மறைந்து விட்டது. மேலும் அருகில் இருந்த ஓடை ஆக்கிரமிப்பால், கழிவுநீர் தற்போது பூங்காவின் உள்ளே தேங்கி உள்ளது.

இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால், பூங்காவைச் சுற்றி வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், இதற்காக செலவளிக்கப்பட்ட லட்சக் கணக்கான ரூபாய் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா செயல்படுத்தப்பட்டால் இப்பகுதி மக்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். எனவே, நகராட்சி நிர்வாகம் விரைந்து செயல் பட்டு இந்த பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்ட போது, பூங்காவை பராமரிக்க புதியதாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 10 தினங்களுக்குள் பூங்கா முழுவதும் சீரமைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags : park ,Rajapalayam , Park
× RELATED கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில்...