×

ஒரத்தநாடு பகுதிகளில் நிமோனியா தொற்றுநோயால் உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஒரத்தநாடு: ஒரத்தநாடு பகுதிகளில் நிம்மோனியா தொற்றுநோயால் குழந்தைகள் உயிருக்குப் போராடி வருவதை தடுக்க தமிழக சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவை சேர்ந்த பாப்பாநாடு பகுதிகளில் தற்போது குழந்தைகளை பாதிக்கும் நிமோனியா தொற்று நோய்கள் பரவி அதிக அளவிலான குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் நுரையீரல் பாதிக்கும் அளவுக்கு குழந்தைகள் உயிருக்கு போராடும் அவல நிலை நிலவி வருகிறது.

ஒரத்தநாடு பகுதிகளில் மட்டுமல்ல தஞ்சை மாவட்டத்தில் அதிகளவில் பெய்து வரும் பனி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும் விதத்திலேயே இருப்பதால் தொற்று நோய்க்கு ஆளாக்கப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே பாப்பாநாடு பகுதிகளை சுகாதாரத்துறை ஆய்வு செய்து நிம்மோனியா பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்ற தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பாநாடு பகுதியை பொறுத்தவரை சுகாதாரத் துறை அலுவலர்கள் பெயரளவிலேயே செயல்படுவதாகவும், தரமான சுகாதாரத் துறை பணிகள் நடைபெறுவது இல்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்நிலையில் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் இரண்டு வயதுடைய ஒரு குழந்தை நிமோனியா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உள்ளூர் மருத்துவமனை, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை போன்ற மருத்துவமனைகளில் காண்பித்தும் நோய் குணமாகாததால் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழக அரசால் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு பெயரளவிலேயே செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால் நோயாளிகள் யாரும் இங்கு வருவது இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனை வழக்கம்போல் திறந்து வேலை நேரம் முடிந்ததும் பூட்டி விடுவதாக நோயாளிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பொதுமக்களுக்கு எந்தவித உபயோகமும் இல்லாத அளவுக்கு அந்த சுகாதார வளாகம் பயனற்ற வளாகமாக காட்சியளிக்கிறது. தமிழக சுகாதாரத்துறை இதை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : Children ,country ,Orathanadu , Orathanadu
× RELATED 1.25 கோடி குழந்தைகள் உடல் பருமனால்...