×

காரைக்குடி பகுதியில் விதியை மீறி வாகனம் ஓட்டும் சிறுவர்கள்

காரைக்குடி: முறையான லைசென்ஸ், வாகனம் ஓட்டுவதற்கான வயது என எந்தவிதமான தகுதியில்லாமல் பள்ளி மாணவர்கள் டூவீலர்கள் முதல் அனைத்து விதமான வாகனங்களை  ஓட்டுவதால் விபத்து ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி பகுதியில் பல்கலைக்கழகம், பொறியியல்கல்லூரி, கலைக்கல்லூரிகள்  உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன.  மெட்ரிக் பள்ளிகள்,   அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில்  20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

வளர்ந்து வரும் இப்பகுதியில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் டூவீலர்கள், கார், ஆட்டோக்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.  பள்ளி மாணவ, மாணவிகள் டூவீலர்களில் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது. இதில் லைசென்ஸ் பெற தகுதியில்லாத  18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே அதிகம். மேலும் பல்வேறு நிறுவனங்களில் வேலைபார்க்கும் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகளிடம் லைசென்ஸ்  இல்லை. முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாததால் தினமும் 20 க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான வாகன விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது.  முறையாக லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை என்பது இல்லை. இதனை போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள்  கண்டுகொள்வதாக தெரியவில்லை.

பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பள்ளிக்கு வாகனங்களை கொண்டுவரக் கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுத்தும் டூவீலர்களில் வருபவர்கள் வந்து கொண்டுதான் உள்ளனர். விபத்துகளை தவிர்க்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு வாகனங்களை தரக்கூடாது என்றார்.

சமூக ஆர்வலர் பாண்டிவெங்கட் கூறுகையில், காரைக்குடி பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் டூவீலர், கார் ஓட்டுவது  அதிகரித்துள்ளது. தகுதியில்லாமல்  வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  18 வயது நிரம்பாமல் வாகனம் ஓட்டுபவர்களின் டூவீலர்களை பறிமுதல் செய்ய வேண்டும். தவிர டூவீலர்களில் மாணவ, மாணவிகள் அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதனால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

Tags : Children ,Karaikudi ,area , Karaikudi
× RELATED “சர்வாதிகார நாடுகளை போல பாஜக ஆட்சி உள்ளது” : கார்த்தி சிதம்பரம்