×

கோடைக்கு முன்பே கடும் வறட்சி: வனப்பகுதியில் உணவின்றி தவிக்கும் வனவிலங்குகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் கோடைக்கு முன்பே வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு வருவதால் உணவு, தண்ணீரின்றி வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க படவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தொப்பூர் கணவாய், மஞ்சவாடி கணவாய், மூக்கனூர் மலை, கோட்டப்பட்டி வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான வன விலங்குகள் வசித்து வருகின்றன. குரங்கு, மான், முயல் போன்றவை அதிகளவிலும், யானை, செந்நாய், காட்டெருமை, சிறுத்தை குறைந்த அளவிலும் இருக்கின்றன. கடந்த சிலநாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளதால், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீர்நிலைகளை குறிவைத்து நகர்வது அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வனத்தில் இயற்கையாக அமைந்துள்ள குளங்கள், குட்டைகள் வற்றிவிட்டன.

வெயில் நேரங்களில் தலைகாட்டாத விலங்குகள் மாலை நேரங்களில் தண்ணீரை தேடி அடர்ந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியில் நடமாடுகின்றன. வனத்தில் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து, பச்சை இழந்து நிற்கின்றன. அனல் கக்கும் வெயிலின் கொடுமையால், காட்டில் இருக்கும் மரங்கள் காய்ந்து வருகின்றன. குரங்குகளுக்கு வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காததால், சாலையில் சுற்றித் திரிகின்றன. லாரி, பஸ், கார்களில் வருவோர் பிஸ்கெட், பழங்கள் தூக்கி வீசிச்செல்கின்றனர். உணவுகளை ஓடிவந்து எடுக்கும்போது வாகனங்களில் அடிப்பட்டு இறக்கின்றன. ஒகேனக்கல், தொப்பூர் கணவாய், மஞ்சவாடி கணவாய், ஒடசல்பட்டி கூட்ரோடு, கோட்டப்பட்டி பகுதிகளில் குரங்குகள் இறக்கும் நிலை உள்ளது. ஒகேனக்கல் சுற்றுலா வரும் பயணிகள், ஈமச் சடங்குகளுக்கு வருவோர் தங்களிடம் மீதமுள்ள உணவுகளை குரங்களுக்கு அளித்து வருகின்றனர்.

அவ்வாறு அளிக்கப்படும் உணவுகளை உண்பதற்காக சாலையைக் கடந்து வரும் குரங்குகள் வாகனத்தில் அடிபட்டும், தண்ணீரின்றியும் சாலையில் இறந்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் தண்ணீர் அருந்துவதற்காக வனத்துறை சார்பில், சுமார் 5க்கும் மேற்பட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பாததால் தண்ணீர் தேடி குரங்குகள் அலைந்து திரிந்து நாளொன்றுக்கு 2க்கும் மேற்பட்ட குரங்குகள் உயிரிழக்கிறது. தர்மபுரி வனச்சரகம் தொப்பூர் கணவாய் சாலையோர வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் பணியாட்கள் மூலம் தண்ணீர் நிரப்பி வருகிறது. இதுகுறித்து தர்மபுரி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி வனச்சரகத்தில் தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்ணீர், உணவு கிடைக்காமல் வனவிலங்குகள் ஊருக்குள் வந்தால், உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,’

Tags : Drought , Drought
× RELATED வறட்சி பகுதியாக அறிவிக்க கோரிக்கை