×

பாதுகாப்பு வேலியில் புலி குட்டி சிக்கி தவிப்பு

ஊட்டி: கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் விவசாய நிலத்தை ஒட்டியுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலியில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க புலி ஒன்று சிக்கியது. கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட உயிலட்டி பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி விவசாய நிலத்தை ஒட்டி ஓடை பகுதி அருகே பாதுகாப்பு வேலியில்சிக்கிய நிலையில் புலி ஒன்று படுத்திருந்ததை பார்த்த மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இத்தகவலின் பேரில் நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது 3 வயது மதிக்கத்தக்க புலி என்பதும், அதன் முன்னங்கால் பாதுகாப்பு வேலியில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து புலிக்கு மயக்க மருந்து செலுத்தி சுருக்கில் இருந்து விடுவிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர் சென்ற நிலையில், மயக்க மருந்து கொண்டு செல்ல தாமதம் ஏற்பட்டது. மயக்க மருந்து வருவதற்குள் நேற்று மாலை சுருக்கு கம்பியில் இருந்து தானாக முன்னங்காலை விடுவித்து கொண்ட புலி குட்டி அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் சென்று படுத்து கொண்டது. அந்த புலியின் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்குபாதுகாப்பு வேலியில் வைத்தவர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags : Tiger , Tiger
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...