×

தூத்துக்குடி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு

ஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே அத்திமரப்பட்டியில் நீச்சல் குளத்தில் மூழ்கிய மாணவர் உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே ஸ்பிக்நகரை அடுத்துள்ள அத்திமரப்பட்டியில் பொதுப்பணித் துறையின் சார்பில் நீச்சல் குளம் அமைத்து கொடுக்கப்பட்டது. இங்கு அத்திமரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள சுந்தர்நகர், ஜெஎஸ்.நகர், கீதாநகர், ஆதிபராசக்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் குளிப்பார்கள். இதனால் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும். ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்த சத்தியசீலன் மகன் ஹட்சன் பிளஸ்சிங்டன் சாமுவேல்(15). இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் தனது அண்ணன், தம்பியுடன் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மாணவர் ஹட்சன் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். அப்போது சகோதரர்கள் அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.

அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் நீச்சல் குளத்தில் குதித்து தேடினர். மீட்க முடியாததால் முத்தையாபுரம் காவல்நிலையம், தெர்மல் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த முத்தையாபுரம் எஸ்ஐ சதீஷ் மற்றும் தெர்மல் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் கோமதி அமுதா தலைமையிலான வீரர்கள், ஊர் மக்கள் உதவியுடன் மாணவர் உடலை மீட்டனர். இறந்த மாணவர் ஹட்சனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இவரது தந்தை சத்தியசீலன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தது குறிப்பிடத்தக்கது. மாணவரின் உடலை பார்த்து தாய் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அத்திமரப்பட்டியை சேர்ந்த செல்வம் கூறுகையில், இதே நீச்சல் குளத்தில் மூழ்கி சிலர் உயிரிழந்துள்ளனர். வெளியூரை சேர்ந்தவர்கள் பலருக்கு நீச்சல் குளத்தின் ஆழம் தெரிவதில்லை. இதனால் அவ்வப்போது நீச்சல் குளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஒரு சிலரை இப்பகுதி மக்கள் காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து உயிரிழப்பை தவிர்க்க நீச்சல் குளத்தில் சிமென்ட் தளம் அமைத்து ஆழத்தை குறைக்க வேண்டும் என்றார்.

Tags : Student ,swimming pool ,Thoothukudi Tuticorin , Tuticorin
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...