×

சுவாமி, அம்பாள் மண்டகபடிக்கு எழுந்தருளியதால் ராமேஸ்வரம் கோயில்நடை பகல் முழுவதும் அடைப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் மாசி சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு நேற்று சுவாமி, அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு எழுந்தருளியதால், கோயில் நடை பகல் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தது. ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு ஸ்படிகலிங்க பூஜை,  காலபூஜை நடைபெற்றது. 6.30 மணிக்கு சுவாமி - அம்பாள் கெந்தமாதன பர்வதத்திற்கு புறப்பாடு நடந்தது. ராமநாத சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மண்டகப்படியில் எழுந்தருளினர். அங்கு பகல் முழுவதும் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.

காலையில் சுவாமி - அம்பாள் கெந்தமாதன பர்வதம் புறப்பாடானவுடன் கோயில் நடை அடைக்கப்பட்டது. அதிகாலை துவங்கி பகல் முழுவதும் கோயில் நடை சாத்தப்பட்டதால் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கவில்லை. மாலை 6 மணிக்கு கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி  இரவு 9 மணிக்கு மேல் கோயில் வந்ததும், மீண்டும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை நடைபெற்றது.

Tags : Rameshwaram temple ,Swami ,Ambal Mandakapatti , Rameswaram
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்