×

ஏரல் அருகே சிவகளையில் அகழாய்வு நடத்தப்படவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் கண்டுபிடிப்பு

ஏரல்: சிவகளையில் அகழாய்வு நடத்தப்படவுள்ள இடத்தில் புடைப்பு சிற்பங்கள் மற்றும் கல்வட்டங்களை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் புதியதாக கண்டறிந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் சிவகளை பகுதியில் தொல்லியல் களத்தை கண்டுபிடித்தார். இதனை இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினருக்கு தெரிவித்ததின் பேரில் தமிழக மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் சிவகளை பகுதியில் வந்து ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சிவகளையில் அகழாய்வு நடத்தவுள்ள இடத்தில் அவர்கள் மூன்று அகழாய்வு குழிகளை அமைத்துள்ளனர். இதில் சிவகளை பரம்பு பகுதியில் இரண்டு குழிகளும், சிவகளை வெள்ளத்திரடு பகுதியில் ஒரு குழியும் அமைப்பதற்காக நடவடிக்கையை கடந்த வாரத்தில் அதிகாரிகள் மேற்கொண்டனர். இந்த பகுதிகளை ஜி.பி.ஆர் மற்றும் டோபோகிராபி சாதனங்களை கொண்டு தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அடுத்த வாரம் சிவகளையில் அகழாய்வு தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில் சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் அப்பகுதியில் புடைப்பு சிற்பம் மற்றும் கல்வட்டங்களை புதியதாக கண்டறிந்துள்ளார். இந்த புடைப்பு சிற்பம் 11 செ.மீ நீளமும், 9 செ.மீ அகலமும் உள்ளது. இந்த புடைப்பு சிற்பம் கண்டுபிடிப்பு வரலாற்று ஆய்வாளர்களிடையே மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆசிரியர் மாணிக்கம் கூறியதாவது: இதற்கு முன் புடைப்பு சிற்பம் கீழடியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்போது சிவகளையிலும் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரண மண்பானையில் ஓவியங்கள் வரைந்தால் அது பானை ஓவியம். அதேபோல் பொம்மை மாதிரி செய்யப்பட்டு அது மண்பானையில் ஒட்டப்பட்டிருந்தல் அது புடைப்பு சிற்பங்களாகும். சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புடைப்பு சிற்பத்தில் மண்பானையில் பெண் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்பானையின் கலர் கருப்பு, சிவப்பு சேர்ந்து இருப்பதால் சுமார் 2,900 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும். அதேபோல் சிவகளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வட்டங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. இந்த கல்வட்டங்கள் தொல்பழங்காலத்தில் இறந்தவர்களின் நினைவாகவோ அல்லது இறந்தவர்களின் உடல்களை புதைத்த இடங்களின் மீதோ அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கல்வட்டங்கள் சிவகளை பகுதியில் நிறைய காணப்படுகிறது. கல்வட்டங்கள் என்பது பழங்கால மனிதர்களின் முதல் கட்டிட கலை என்றும் பழங்காலத்தில் தாமிரபரணியாறு ஓடிய இடங்களில் வெவ்வெறு அளவுகளின் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் கல்வட்டங்கள் பொதுவாக கொங்கு மண்டலங்களில் அதிகம் காணப்படுகின்றன. தற்போது தாமிரபரணி நதிக்கரைகளிலும் கல்வட்டங்கள், கற்பதுகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் கல்வட்டங்களை அமைக்கும் முறை இப்பகுதியிலிருந்து மற்ற பகுதிகளுக்கு பரவியிருக்கலாம் என்றார்.

Tags : Sivalai , Excavating
× RELATED சிவகளை தபால் நிலையத்தில் ஒரு மாதமாக சர்வர் கோளாறு