×

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 16,382 கோப்புகளில் கையெழுத்து

சென்னை: முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16,382 கோப்புகளில் உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நேற்றுடன் 3 ஆண்டுகள் முடிந்து, 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த 3 ஆண்டுகளில் முதல்வர் எடப்பாடி எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி  உள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஏரிகள், சிறு பாசன ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் போன்றவற்றை தூர்வாரி குடிமராமத்து என்ற திட்டம்  துவங்கப்பட்டு இதுவரை ரூ.930.25 கோடியில் 4,965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர்வாரப்பட்டு, 2,37,492 கனமீட்டர் வண்டல்மண் 1,846 பயனாளிகளுக்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.427.76 கோடி மதிப்பீட்டில் ஆதனூர்-குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிகள் ரூ.1,652 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் ரூ.2,962 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் “நடந்தாய் வாழி  காவிரி” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.6,448 கோடியில், சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட சாலைப் பணிகள் துவக்கப்படவுள்ளன. ரூ.1,081.40 கோடியில், மண்ணிவாக்கம்-நெமிலிச்சேரி வரை சென்னை வெளிவட்ட சாலை பணிகள் துவக்கப்படவுள்ளன. ரூ.1,075 கோடியில்,  நெமிலிச்சேரி-மீஞ்சூர் வரை சென்னை வெளிவட்ட சாலைப் பணிகள் துவக்கப்படவுள்ளன.

கடந்த 3 ஆண்டுகளில் 4921 புதிய பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் வேலைவாய்ப்பினை அதிக அளவில் பெற்றிட வேண்டும் என்பதற்காக 4 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளன. வேலையில்லா  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திட தனியார் துறையுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 1,90,248 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் ரூ.231.74 கோடி செலவில் “குறுவை மற்றும் சம்பா தொகுப்பு” திட்டத்தின் மூலம் 9,83,425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ரூ.1,259.38 கோடியில் நெம்மேலியில் 150 மில்லியன் திறன் கொண்ட, கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு  நிலையம் துவங்கப்பட்டுள்ளது.  

2019 ஜனவரி 1 முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ  ரயில் திட்டம் கட்டம்-2க்கு ரூ.69,180 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.  உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, அதில் ரூ.3,00,501 கோடி அளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு  சென்றதன் மூலம், 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ₹19,136 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 83,837 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெற ஏதுவாக சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளது.8,166 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள ரூ.6 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.  4,128 கிறித்துவர்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள ரூ.1.20 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் கிறித்துவ தேவாலயங்கள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 16,52,370  பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.403.07 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 3,28,688 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு  வருகிறது. மகளிர் பாதுகாப்பிற்கு “காவலன்” செயலி துவக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசின் ஒப்புதல்  பெறப்பட்டுள்ளது. உலகத்தரத்தில் மிகப்பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா, சேலம் மாவட்டம், தலைவாசலில் 1,100 ஏக்கர் நிலப்பரப்பில், ₹1,023 கோடி மதிப்பீட்டில் அமைய முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார். சமீபத்தில், மாமல்லபுரத்தில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருபெரும் உலகத் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த  தமிழக அரசையும், காவல் துறையினரையும் பிரதமர், சீன அதிபர், சீன நாட்டு அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினார்கள். தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஊரகத் தூய்மை மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருது உள்ளிட்ட  பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது. முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 16,382 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.

Tags : Edappadi Palanisamy , 16,382 files were signed during the first three years of Edappadi Palanisamy's tenure
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு