எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆலோசனை: மகளிர் அணிக்கு தேர்தலில் அதிக சீட் நெல்லை நிர்வாகிகள் போர்க்கொடி: அதிமுக அலுவலகத்தில் பரபரப்பு

சென்னை: மகளிர் அணியினருக்கு தேர்தலில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நெல்லை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திடீர் கோரிக்கை வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் முன்னிலையில் நடந்தது.  ஒவ்வொருவராக  அழைக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா பேசும்போது, தனக்கு எந்தக் குறையும் இல்லை. கட்சி சொல்வதை கேட்டு செயல்படுவதாக தெரிவித்தார். எம்பி முத்துக்கருப்பன் பேசியபோது, ‘‘நான் எம்பியாக  இருந்தாலும் கட்சிப் பதவியையும் சேர்த்து கவனித்தேன். பின்னர் நான்தான், தற்போதைய மாவட்டச் செயலாளரை பரிந்துரை செய்தேன். என்னுடைய எம்பி பதவி முடியப்போகிறது. இதனால் கட்சிப் பதவியை ஏற்று செயல்படத் தயாராக  இருக்கிறேன். ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரிக்க வேண்டும். தற்போது முஸ்லிம்கள் போராட்டம் நடக்கிறது. இதனால் நெல்லையில் நமக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். இதை நாம் சரிக்கட்ட வேண்டும் என்றால்,  மாவட்டத்தைப் பிரித்து நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்” என்றார்.

அப்போது முதல்வர் எடப்பாடி குறுக்கிட்டு, ‘‘கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைகளை கூறுங்கள். இது பதவி கேட்கும் கூட்டம் இல்லை’’ என்றார்.  தொடர்ந்து எம்.பி. முத்துக்கருப்பன் பேசும் போது, ‘சங்கரன் கோவில்  நகராட்சி இடைத் தேர் தலில் ராஜலட்சுமியை நான்தான் ஜெயிக்க வைத் தேன்’ என்றார். அப்போது குறுக்கிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,‘ இடைத்  தேர்தலில்  முத்து செல்வியை எம்எல்ஏ ஆக்கியது நாங்கள்தான் என்று பதிலடி கொடுத்தார். இதைக்கேட்ட முத்துக் கருப்பன், ‘நான் சொல் வது நகராட்சித் தலைவர் தேர்தல், நீங்கள் சொல்வது பேரவை இடைத்தேர்தல்’ என்றார். இதைக்கேட்ட  ஓ.பன்னீர்செல்வம் பதில் எதுவும் அளிக்காமல் அமைதியாகி விட்டார்.

அமைச்சர் ராஜலட்சுமி பேசும்போது, தமக்கு எந்தக் குறையும் இல்லை. கட்சி சொல்வதை கேட்டு செயல்படுவேன் என்றார். எம்பி விஜிலா சத்தியானந்த் பேசும்போது, ‘‘மகளிர் அணியினரை கோஷம் போட மட்டுமே பயன்படுத்துகின்றனர்.  உள்ளாட்சித் தேர்தல் வந்தவுடன் வட்டச் செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களுடைய மனைவி அல்லது மகள்களுக்கு, உறவினர்களுக்கு சீட் வாங்கிக் கொடுத்து விடுகின்றனர். எங்களுக்கு எந்த உள்ளாட்சிப்  பதவியையும் கொடுப்பதில்லை. மகளிர் அணியினருக்கு உள்ளாட்சித் தேர்தலில் பதவிகளை வழங்க வேண்டும்” என்றார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு, ‘‘நெல்லை மாநகர மேயராக புவனேஸ்வரியை ஜெயலலிதா  நியமித்தார். உலகத்திலேயே போட்டியிடாமல் வென்ற மேயர் அவராகத்தான் இருப்பார். பெண்களுக்கும் பதவி வழங்குகிறோம்’’ என்றார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது,‘‘உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குகிறோம்’’ என்றார். இதற்கு பதில் அளித்த விஜிலா,‘‘50%கொடுக்கிறீர்கள். ஆனால், மகளிர் அணியினருக்கு கொடுக்கவில்லை.  நிர்வாகத்தில் உள்ளவர்களின் மனைவி, மகள்களுக்கு கொடுக்கின்றீர்கள்’’ என்றார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார். முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் கூறும்போது, ‘‘கட்சியினர் தவறான தகவல்களை உங்களுக்கு தெரிவித்து சீட் கேட்பார்கள். அதனால் நீங்கள் உளவுத்துறை மூலம் விசாரித்து சீட் வழங்கினால் வெற்றி பெறலாம்’’ என்றார்.  இதைத் தொடர்ந்து, கூட்டம் நிறைவடைந்தது.

Related Stories:

>