×

பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது: அகர்வால், பன்ட் அரை சதம்

ஹாமில்டன்: நியூசிலாந்து லெவன் - இந்தியா லெவன் அணிகள் மோதிய 3 நாள் பயிற்சி ஆட்டம் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலில் விளையாடிய டி20 தொடரில் 5-0 என்ற கணக்கில் அபாரமாக வென்று ஒயிட்வாஷ் சாதனை படைத்தது. அடுத்து நடந்த ஒருநாள் போட்டித் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பழிதீர்த்தது.இதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறும் வகையில் இந்தியா லெவன் - நியூசிலாந்து லெவன் மோதிய 3 நாள் ஆட்டம் செடான் பார்க் மைதானத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கி நடந்து வந்தது. இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா லெவன் 263 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (78.5 ஓவர்). புஜாரா 93 ரன், விஹாரி 101 ரன் விளாசினர். நியூசி. லெவன் முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (74.2 ஓவர்). ஹென்றி கூப்பர் அதிகபட்சமாக 40 ரன் எடுத்தார். இந்திய லெவன் பந்துவீச்சில் ஷமி 3, பூம்ரா, உமேஷ், சைனி தலா 2, அஷ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 28 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா லெவன் 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன் எடுத்திருந்தது. பிரித்வி ஷா 35, மயாங்க் அகர்வால் 23 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஷா மேற்கொண்டு 4 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார்.ஷுப்மான் கில் 8 ரன்னில் வெளியேற, அகர்வால் - ரிஷப் பன்ட் ஜோடி 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 100 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அகர்வால் 81 ரன் (99 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஓய்வு பெற்றார். ரிஷப் பன்ட் 70 ரன் (65 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார். இந்தியா லெவன் 48 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் டிராவில் முடிந்தது. சாஹா 30, ஆர்.அஷ்வின் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் டாரில் மிட்செல் 3 விக்கெட் வீழ்த்தினார்.


Tags : Agarwal ,Draw , Training game, Draw , Agarwal, Pant
× RELATED டாக்டர் அகர்வால்ஸ் கண்...