×

‘பைபர் ஆப்டிக் கேபிள்’ மூலம் தகவல் பரிமாற்றம் 40க்கும் மேற்பட்ட துணை மின்நிலையங்களில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகள்

* தமிழக மின்வாரியம் புது திட்டம்
* மழை, புயலால் பாதிப்பு ஏற்படாது

சென்னை: ‘பைபர் ஆப்டிக் கேபிள்’ மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதியாக 40க்கும் மேற்பட்ட துணைமின்நிலையங்களில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கு, தமிழக மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் மழை, புயல் போன்ற ஆபத்தான காலங்களில் தொடர்புகொள்வதில் சிக்கல் இருக்காது எனவும் வாரியம் நம்புகிறது. தமிழகத்தில் துணைமின்நிலையங்களில் மின்சாரத்தின் திறன் குறைக்கப்பட்டு, வீடு உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்பு வழங்குகிறது. இதில் கோபுரங்கள், கம்பங்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு கொண்டுசெல்லப்படும் இடங்களில் மூன்று கம்பியில் மின்சாரம் செல்லும். அதன்மேல் ‘எர்த் ஒயர்’ ஒன்று பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த கம்பி மழை, இடியின் போது மின்கம்பியை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த கம்பிக்கு பதில் ‘பைபர் ஆப்டிக்’ கேபிள் ெதாழில்நுட்பத்தை செயல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் தனது தொலைதொடர்பு சேவையை மேம்படுத்த முடியும் என மின்வாரியம் நம்புகிறது. அதாவது மழை, புயல் காலங்களின்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திலுள்ள ஊழியர்களை எவ்வித சிக்கலும் இல்லாமல் தொடர்பு கொள்ள முடியும். இதற்காக 40க்கும் மேற்பட்ட துணைமின்நிலையங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின்வாரியம் தற்போது ‘பவர் லைன் கேரியர் கம்யூனிகேஷன்’ என்ற தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மின்கோபுரத்திற்கு மேல் ‘பைபர் ஆப்டிக் கேபிள்’களை அமைக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்த கேபிள் ‘எர்த்’ வயராக செயல்படுவதுடன், தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படும்.

மழை, புயலின் போது தனியார் ெதாலைதொடர்பு சேவைகள் பாதித்தாலும், இந்த மின்கோபுர தொலைதொடர்பு சேவையில் பிரச்னை ஏற்படாது. ‘பவர் லைன் கேரியர் கம்யூனிகேஷன்’ல், மின்கம்பியில் அதிக அளவு மின்சாரம் செல்கிறது. தொலைதொடர்பின் போது நெட்வொர்க்கில் பேசுவது சரியாக கேட்காதது. இதற்கு தீர்வு காணும் வகையில் ‘பைபர் ஆப்டிக்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் புயல், மழை காலங்களின்போது எளிதாக தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதற்காக 49 இடங்களில் உள்ள துணைமின்நிலையங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் வேகமாக நடந்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

‘சப்-ஸ்டேஷன்கள்’ எது?
கோயம்பேடு, கோயம்பேடு ஜிஐஎஸ், திருவேற்காடு, இன்கூர், கடலுங்குடி, நெய்வேலி, உளுந்தூர்பேட்டை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, ராசிபுரம், அணைகடவு, ஆழியார், மணலி, அம்பத்தூர், ஈச்சங்காடு, கடலூர், உடுமலைபேட்டை, பல்லடம், சமயபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 49 துணைமின்நிலையங்களில் ‘பைபர் ஆப்டிக் கேபிள்’ தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளது.

Tags : Piper optic cable, transmission, sophisticated technology tools
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...