×

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம்

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி 3வது நாளாக நேற்றும் வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு,  தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும்  முஸ்லிம் அமைப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இருதினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டை லாலாகுண்டா பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கலைந்து செல்லாததால் போலீசார் தடியடி நடத்தினர். இதில், பலர் காயமடைந்தனர். ஒருவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.இதைக்கண்டித்து தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து திமுக, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதுகுறித்து போராட்டக்காரர்கள் கூறுகையில், “குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நாங்கள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு எந்த அறிவிப்போ, பேச்சுவார்த்தையோ நடத்த முன்வரவில்லை. போராட்டம் நடக்கும் பகுதி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியாகும். தமிழகத்தில் எந்த பிரச்னை என்றாலும் முதலில் செல்லக்கூடியவர் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் தனது தொகுதி மக்கள் பிரச்னையை தீர்க்காமல் மெத்தனமாக செயல்பட்டு வருகிறார். பாஜகவின் எடுபிடி அரசாக தமிழக அரசு செயல்படுவதால் பிரச்னைக்கு தீர்வுகாண முடியாமல் தவிக்கிறது.

எனவே, இந்த பிரச்னையில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போல் உருவாகும் சூழ்நிலை நிலவுகிறது. சட்ட மன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக மசோதா தாக்கல் செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். இதை நாங்கள் முஸ்லிம் பிரச்னையாக பார்க்கவில்லை. நாட்டு நலனுக்காக போராடி வருகிறோம். மதத்தின் பெயரால் மத்திய அரசு எங்களை பிரிக்க பார்க்கிறது. எங்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்துக்களும் போராட வரவேண்டும்” என்றனர். நேதாஜி நகர்: சென்னை  வண்ணாரப்பேட்டை லாலா குண்டா பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் மீது போலீசார்  தடியடி நடத்தி கலைத்தனர்.

இதைக்கண்டித்து நேற்று காலை தண்டையார்பேட்டை, நேதாஜி நகர் மெயின் தெருவில் 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு  ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ‘முஸ்லிம்கள் மீது தடியடி  நடத்திய போலீசாரை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற  வலியுறுத்தியும், மத்திய- மாநில அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதில், பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்  கலந்துகொண்டனர்.

Tags : Muslims ,Washermanpet , Citizenship, colorism, Muslims struggle
× RELATED மோடியின் பேச்சை விமர்சித்த பாஜக...