×

தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

சென்னை: தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், நாகை, நீலகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல் 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக்கல்லூரி அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கேட்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதன்பேரில் 10 இடங்களில் மத்திய அரசு புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து ரூ1200 கோடி செலவில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி அமைக்க வருவாய்த்துறை சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கிடையே பொதுப்பணித்துறை சார்பில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், நாகை, நீலகிரி ஆகிய 9 மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், புதிதாக அமையவுள்ள 9 மருத்துவகல்லூரிகளின் கட்டுமான பணிக்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி மார்ச் 1ம் தேதி ராமநாதபுரம், விருதுநகர் மருத்துவகல்லூரி கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து மார்ச் 4ம் தேதி கிருஷ்ணகிரியிலும், மார்ச் 5ம் தேதி நாமக்கல் மற்றும் திண்டுக்கல்லிலும், மார்ச் 7ம் தேதி நாகையிலும், 8ம் தேதி திருவள்ளூரிலும், 14ம் தேதி திருப்பூரிலும் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மார்ச் 5ம் தேதி கரூர் மருத்துவக்கல்லூரியில் கூடுதல் கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கிறார். அரியலூர், கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரிக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. ஆனால், இந்த 2 இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் கட்டுமான பணிகளை தொடங்கும் வகையில் முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுவார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : colleges ,Tamil Nadu Nine ,Tamil Nadu , 9 Medical College, CM, Founding
× RELATED 3 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன்கள் நியமனம்