×

ஜைகா நிபந்தனை ஏற்பதில் சிக்கல் ரூ400 கோடி நிதியை விடுவிக்க மறுப்பு: 2வது முறையாக டெண்டர் கால நீட்டிப்பு

சென்னை: ஜைகா நிபந்தனை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து, ரூ.400 கோடி மதிப்பில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களுக்கு நிதியை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) முன்வந்துள்ளது. இந்த ஜைகா மூலம் மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு மற்றும் நவீன உபகரணங்கள் வாங்குவதற்கு தேவையான நிதியுதவியினை வழங்கி வருகிறது. இதன் மூலம் மருத்துவமனைகளை சூப்பர் ஸ்பெஷாலிட்டி அளவுக்கு தரம் உயரும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கோவை மருத்துவகல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அதி நவீன மருத்துவ உபகரணங்களுடன் கூடிய சிகிச்சை மையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் அனுப்பி வைத்தார். தற்போது இந்த அறிக்கைக்கு ரூ.400 கோடியே 4 லட்சத்து 18 ஆயிரத்து 73 நிதி ஒதுக்கீடு செய்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 3 மருத்துவகல்லூரிகளில் 6 மாடி கொண்ட சிகிச்சை மையம், எக்ஸ்ரே மையம், அவசர ஆய்வகம், அறுவை சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு வார்டு, நரம்பு மற்றும் பக்கவாதம் சிகிச்சை வார்டு, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஐவிஆர் மையம், அதி தீவிர சிகிச்சை மையம், என்டோஸ்கோபி சிகிச்சை மையம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மையங்கள் இந்த கட்டிடத்தில் அமைக்கப்படுகிறது.

இந்த 3 மருத்துவக்கல்லூரியின் கூடுதல் கட்டிடங்களுக்கான கட்டுமான பணி பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ள கடந்த நவம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த நிலையில் பொதுப்பணித்துறைக்கு ஜைகாவின் நிபந்தனையை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கான்ட்ராக்டர்கள் தகுதி தொடர்பாக சில கேள்விகளை ஜைகா கேட்டிருந்தது. இது தொடர்பாக, ஜைகாவுக்கு பொதுப்பணித்துறை சார்பில் விளக்கம் அளித்து கடிதம் எழுதியுள்ளது. இதை தொடர்ந்து ஜைகா அந்த நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்தால் தான் டெண்டர் விட முடியும். இதன்காரணமாக இன்று திறக்கப்படுவதாக இருந்த டெண்டர் 2வது முறையாக வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்து பொதுப்பணித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால், ஜைகா நிதியுதவியுடன் 3 மருத்துவக்கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களை கட்டும் பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : release ,JICA , Zika condition, tender, extension
× RELATED பாரூர் ஏரியில் இருந்து கால்வாய்களை...