×

திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் சிஏஏவுக்கு எதிரான 2 கோடி கையெழுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிவைப்பு: 19ம் தேதி நேரில் வழங்கப்படும்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் 2 கோடி கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து படிவங்கள் கூட்டணி தலைவர்கள் முன்னிலையில் நேற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு இவற்றிற்கு எதிராக, தமிழக மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்துவது என கடந்த மாதம் 24ம் ேததி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மற்ற இடங்களில் கூட்டணி கட்சி தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கம் கடந்த 8ம் தேதி முடிந்தது.
இதில் பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்துதரப்பு மக்களும் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர். முதலில் 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கம் பெறப்படும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அனைத்து தரப்பு மக்களும் முன்வந்து ஆதரவு தந்ததால் தற்போதைய கணக்கின்படி 2 கோடி கையெழுத்தைத் தாண்டிவிட்டது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் பெறப்பட்ட கையெழுத்துக்களை அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அளித்தனர்.

மாநிலம் முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 66 ஆயிரத்து 82 கையெழுத்திட்ட படிவங்கள் ைகயெழுத்து பெறப்பட்டது. இந்த கையெழுத்து படிவங்களை அண்ணா அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா - கலைஞர் சிலை அருகில் கையெழுத்து படிவத்தை வைத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இந்தநிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தி.க.தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கையெழுத்து படிவத்தை குடியரசு தலைவரிடம் கொடுப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கையெழுத்து படிவத்தை வரும் பிப்ரவரி 19ம் தேதி கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் அனைவரும் குடியரசு தலைவரை நேரில் சந்தித்து வழங்குவார்கள் என்று தெரிகிறது.

Tags : alliance party leaders ,CAA ,DMK ,Republican ,President ,CA ,Republic , DMK, CA, Signature, President of the Republic
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!