×

மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன்: ஜோதிராதித்ய சிந்தியா பேச்சால் பரபரப்பு

போபால்: வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மத்திய பிரதேச முதல்வருக்கு எதிராக சாலையில் இறங்கி போராடுவேன் என்று, ஜோதிராதித்ய சிந்தியா பேசியது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் அம்மாநில முதல்வரும், மாநில தலைவருமான கமல்நாத் மற்றும் ராகுல்காந்திக்கு நெருக்கமான இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருகிறது. கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே, சிந்தியாவிற்கு அது பிடிக்கவில்லை. தற்போது சிந்தியா, கமல்நாத் அரசை நேரடியாக விமர்சிக்க தொடங்கி உள்ளார். விரைவில் மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், போபாலில் ஆசிரியர்கள் உடன் நடந்த ஆலோசனை கூட்டம் ஒன்றில் சிந்தியா பேசுகையில், ‘‘மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. ஆசிரியர்களின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்குறுதிகள் பல இன்னும் நிஜமாகவில்லை. உங்கள் (ஆசிரியர்கள்) கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நான் உங்களுடன் இருப்பேன். உங்களுக்கு யாரும் இல்லை என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நானே அரசுக்கு எதிராக போராடுவேன். சாலையில் இறங்கி போராடுவேன்’’ என்று கூறினார். இதற்கு, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் கூறிய பதிலடியில், ‘‘வாக்குறுதிகள் என்பது ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் விஷயம் இல்லை. வாக்குறுதிகள் என்பது ஐந்து வருடத்திற்கானது.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். விரைவில் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். நான் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சிந்தியா கூறுகிறார். இது அவரின் கருத்து. அவருக்கு விருப்பம் இருந்தால் அவர் சாலையில் இறங்கி போராடலாம். நாங்கள் அவரை தடுக்கவில்லை. எல்லா கட்சிக்குள்ளும் உட்கட்சி பூசல் இருக்கிறது. கட்சித் தலைவர் சோனியா காந்தி, மாநிலத்திற்கான புதிய தலைவரை தேர்ந்தெடுப்பார்’’ என்றார்.

Tags : Jyotiraditya Cynthia ,CM ,Madhya Pradesh , Madhya Pradesh Chief Minister, Jyotiraditya Scindia
× RELATED மகன் மீது பல கோடி மோசடி வழக்கு ம.பி....