×

மானூர் யூனியனில் 41 பஞ்சாயத்துகளில் திறப்பு விழா முடிந்தும் விநியோகம் இல்லை: கூட்டுக்குடிநீர் திட்டம் டோட்டல் வேஸ்ட்

பேட்டை: நெல்லை அருகே 40 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், திறப்பு விழா கண்ட  மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் இதுவரை குடிநீர் விநியோகம் இல்லாததால் 43 கிராம பஞ்சாயத்துகளின் குடிநீர் ஆதாரம்  கேள்விக்குறியாகி உள்ளது. நெல்லை மாநகராட்சியின் புறநகர் பகுதிகளை உள்ளடக்கியது மானூர் பஞ்சாயத்து யூனியன். பரந்து விரிந்த மானூர் யூனியன் 41  பஞ்சாயத்துகளையும், 170 கிராமங்களையும் உள்ளடக்கியது. இப்பகுதி மக்களின்  நீண்டகால அடிப்படை தேவையான குடிநீர் பிரச்னையை பூர்த்தி செய்யும் வகையில்,  கடந்த 2011-12 சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவால் மானூர் யூனியன் பகுதியில் ரூ.53 கோடி திட்ட மதிப்பீட்டிலும்,  பாளை. ஒன்றியத்திற்குட்பட்ட 2 பஞ்சாயத்துகளுக்கு ரூ.9.8 கோடியிலும் என  மொத்தம் ரூ.62.8 கோடியில் மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதற்கான  டெண்டர்கள் கோரப்பட்டு ஒப்பந்ததாரரால் பணிகள் தொடங்கி நடந்து வந்தன.  இதற்கென மேலக்கல்லூர் மற்றும் பாலாமடை தாமிரபரணி ஆற்றில் இருந்து  நீராதாரங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கிருந்து பம்பிங் செய்து 41 கிராம  பஞ்சாயத்திற்கும் குடிநீர் விநியோகம் செய்ய திட்ட வரைவு வகுக்கப்பட்டு  பணிகள் நடந்து வருகின்றன. இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மானூர் யூனியன் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு தனி  நபருக்கும் தினமும் 55 லிட்டர் குடிநீர் என விகிதாசாரம் கணக்கீடு  செய்யப்பட்டது. இதற்காக கிராம பஞ்சாயத்துகளின் மக்கள் தொகை அடிப்படையில் தேவைக்கேற்றவாறு  ஆங்காங்கே சம்ப்புகள் மற்றும் கூடுதல் நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு  உள்ளன.

சரியான திட்டமிடல் இல்லாத தரமற்ற பணியால் மந்த கதியில்  நடந்துவந்த இப்பணிகள் நிறைவு பெறாத நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு  அர்ப்பணித்ததாக அதிகாரிகள்  தவறான அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் மறைந்த  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் திறந்து வைத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை இந்த கூட்டுக் குடிநீர் திட்டத்தின் 40 சதவீத பணிகள்  கூட நிறைவு பெறாமல் முடங்கிய நிலையில் செயல்பாடற்று கிடக்கிறது.  இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மானூர் யூனியனில் அடங்கியுள்ள கிராம பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம், உள்ளாட்சித்துறை ஆகியவற்றிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

மாவட்ட  நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுத்த கூடுதல்  அவகாச காலமும் முடிவுற்ற நிலையிலும் பணிகள் முடிக்கப்படவில்லை. அதற்காக தண்டத்  தொகை விதிக்கப்பட்டு அதை செலுத்தியும் பணிகள் மேற்கொள்வதில் தொய்வு  ஏற்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அதிகாரிகள் எப்படியாவது  பெயரளவிற்கு வேலையை முடித்து பணிகள் நிறைவுற்றன என அரசுக்கு சமர்பிக்க  வேண்டும் என்ற எண்ணத்தோடு முன்னுரிமை கொடுத்து பணிகளை விரைவுபடுத்துகின்றனர்.  ஆனால் அவசர கதியில் நடக்கும் தரமற்ற பணியினால் மானூர் யூனியன் மக்களின் நீண்டகால கனவான மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் பாழாய் போய்விடுமோ என்ற  அச்சம் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.

மானூர்  கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக 2.5  அடி ஆழம் தோண்டி பதிக்கப்பட வேண்டிய குழாய்கள் அவசர கதியில் 1.5 அடி ஆழம்  மட்டுமே தோண்டி பெயரளவுக்கு பதிக்கப்பட்டு வருகிறது. குழாய் பதித்த இடங்களை  கடக்கும் சிறிய அளவிலான டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்றால் கூட  குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக வெளியேறுகிறது. மேலும்  சோதனை ஓட்டத்தில் குறைந்த குதிரை திறன் கொண்ட அழுத்தத்துடன் தண்ணீர் பம்பிங்  செய்யப்படும் போது அதற்குக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் குழாய்கள்  ஆங்காங்கே வெடித்து குடிநீர் பீறிட்டு பொங்கி வழிகிறது. 2011ம் ஆண்டே  இத்திட்டதிற்கென பைப்புகள் கொள்முதல் செய்யப்பட்டு அங்குள்ள தனியார்  குடோனில் திறந்தவெளியில் கடும் வெப்பம் மற்றும் மழையிலும் கிடந்ததால்  அவற்றின் தரம் நாளுக்குநாள் குறைந்தது. இவற்றை கொண்டு  குழாய் பதிக்கும் போது சேதமடைகிறது.

புதிதாக  அமைக்கப்பட்டுள்ள சம்ப்புகள், நீர்த்தேக்க தொட்டிகள் தண்ணீர் கொண்டு  நிரப்பி வைக்கப்படாததால் வெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதுடன் உறுதித்தன்மையும்  கேள்விக்குறியாகி உள்ளது. எப்படியாவது வேலையை முடித்துவிட வேண்டும் என்ற  முனைப்போடு செயல்படும் அதிகாரிகளின் உத்தரவால் தரமற்ற நிலையில் பணிகள் நடந்து  வருவதால் இத்திட்டம் வெற்றி பெறுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

சாபக்கேடான திட்டம்
நரசிங்கநல்லூரை சேர்ந்த முத்து கூறுகையில், ஆண்டாண்டு காலமாக தெரு நல்லிகள் மூலம் குடிநீர் பிடித்து வந்தோம். மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக அமையும். வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பெற்று பயனடைந்து விடலாம் என நினைத்த எங்களுக்கு 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திட்டம் நிறைவு பெறவில்லை. தரமற்ற நிலையில் நடைபெறும் பணியால் திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மானூர் யூனியன் மக்களின் தாகம் தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் இன்று வரை நிறைவு பெறாதது எங்களுக்கு சாபக்கேடாகவே உள்ளது என்றார்.

சாபக்கேடான திட்டம்
நரசிங்கநல்லூரை சேர்ந்த முத்து கூறுகையில், ஆண்டாண்டு காலமாக தெரு நல்லிகள் மூலம் குடிநீர் பிடித்து வந்தோம். மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக அமையும். வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு பெற்று பயனடைந்து விடலாம் என நினைத்த எங்களுக்கு 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் திட்டம் நிறைவு பெறவில்லை. தரமற்ற நிலையில் நடைபெறும் பணியால் திட்டம் வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மானூர் யூனியன் மக்களின் தாகம் தீர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட இத்திட்டம் இன்று வரை நிறைவு பெறாதது எங்களுக்கு சாபக்கேடாகவே உள்ளது என்றார்.


Tags : panchayats ,opening ceremony , Manor Union, 41 panchayats, inauguration, joint water scheme
× RELATED மதுரை மக்களின் பொழுதுபோக்கிற்காக ரூ.50...