×

குடிசைகளில் உருவாகி உலகெல்லாம் செல்கிறது நுண்ணிய கலைநுட்பத்தால் மதிமயக்கும் மரச்சிற்பங்கள்: இது தம்மம்பட்டியின் தனித்துவம்

தம்மம்பட்டி: சேலத்தில் ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற பெருமைக்குரிய ஊர்  தம்மம்பட்டி. இங்குள்ள காந்திநகரில் உளிகளின் மெல்லிய ஓசையில் இழைந்து, வளைந்து, குழைந்து தினமும் சாகாவரம் பெறுகிறது ஆயிரமாயிரம் மரச்சிற்பங்கள்.  புராணங்கள், இதிகாசங்கள், பண்டைய வாழ்வியல் நிகழ்வுகள் என்று ஒவ்வொரு சிற்பத்திலும் மிளிர்கிறது ஆழ்ந்த கலை நுட்பம். ஒவ்வொரு குடிசைக்குள்ளும் கைவினைஞர்கள் கலை நுட்பத்துடன் உருவாக்கும் அற்புத சிற்பங்கள், கூட கோபுரங்களிலும், மாடமாளிகைகளிலும் கோலோச்சி உலக அரங்கிலும் மதிமயக்கி நிற்கிறது. தமிழகத்தில் அரும்பாவூர், கள்ளக்குறிச்சி என்று எண்ணற்ற இடங்களில் கைவினைஞர்களின் சிந்தனையில் மரச்சிற்பங்கள் உருவாகிறது. ஆனாலும் அவற்றுக்கு இல்லாத சிறப்பு, தம்மம்பட்டி சிற்பங்களுக்கு மட்டுமே இருப்பது தான் இதற்கு காரணம் என்று பெருமிதம் கொள்கின்றனர் இங்குள்ள கைவினைஞர்கள். சிற்ப சாஸ்திர கலைக்கு உட்பட்டு சரிவிகித அளவில் செதுக்கப்படுவதால் மட்டுமே தம்மம்பட்டி மரச் சிற்பங்கள் தனித்துவம் பெறுகிறது. இங்கு சிற்பங்கள் செதுக்குவதற்காக தேர்வு செய்யப்படும் மரங்களும் அபூர்வமானது. மஞ்சள் நிறம் கொண்ட மாவுலிங்க மரங்கள், பழுப்பு நிறம் கொண்ட தூங்குவாகை மரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதே போல் தெய்வங்களுக்கான வாகனங்கள், அத்திமரத்தில் இழைக்கப்படுகிறது. சிற்பங்கள் இழைக்க நாம், தேர்ந்தெடுக்கும் மரங்கள் கணு விரிசல் இல்லாமல் கர்ப்ப ஓட்டத்துடன் நன்றாக இருக்கிறதா? என்பது உறுதி செய்யப்படுகிறது.

மரங்களின் குருத்துக்களை அகற்றிய பிறகு, நடுப்பகுதியை பிரித்து, அதில் உள்ள விரிசல்களை அகற்றுவோம். அதற்கு பிறகு புறப்பகுதியை, அதாவது மரப்பட்டையின் உட்பகுதியை தேர்வு செய்வோம். அதில் வெள்ளை படிவங்கள் இருக்கும் மரங்களை நிராகரித்து விடுவோம். அப்படி இருந்தால் அது, பூச்சி அரித்த மரமாகும் என்பதே இதற்கு காரணம். இப்படி எந்த குறையும் இல்லாமல் நிறைவாக இருக்கும் மரங்களின் பகுதியை தான், நமது முன்னோர்கள், ‘‘வைரம் பாய்ந்த கட்டை’’ என்பார்கள். அது போன்ற கட்டைகளில் தான் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு அச்சாரமிடப்படுகிறது. வைரம் பாய்ந்த கட்டை தயாரானவுடன் 7நிலைகளில் சிற்பங்கள் உருவாகிறது என்கின்றனர் மூத்த கைவினைஞர்கள். இது குறித்து மேலும் அவர்கள் கூறியதாவது: முதலில் சிற்பங்களின் அவுட்லைன் வரையப்படுகிறது. பின்னர் ஜாடிப்பு, கரைவு செதுக்குதல், உருவத்தை நுட்பமாக செதுக்குதல், அணிகலன்கள் செதுக்குதல், அங்க அவயங்கள் செதுக்குதல், சீராக தேய்த்தல் என்று 6நிலைகளை கடந்த சிற்பங்களுக்கு, 7வது நிலையின் நிறைவில் முகவடிவம் கொடுக்கப்படுகிறது. அதற்கு பிறகு சிற்பங்கள் இயற்கையாக இருக்க வேண்டுமா? பளிங்கு போல் ஜொலிக்க வேண்டுமா? என்ற வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கூடுதல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மெல்லிய உழிகளும், ஒருநிலைப்பட்ட மனமுமே அற்புத மரச்சிற்பங்களை செதுக்குவதற்கு நாங்கள் அமைத்துக் கொள்ளும் முதல் அஸ்திவாரம். கணபதியாக, கண்ணனாக, முருகனாக, விஷ்ணுவாக, இயேசுவாக, புத்தனாக நாங்கள் வடிக்கும் சிற்பங்களை வழிபடும் போது, இறைவனின் அருள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு எந்த களங்கமும் வரக்கூடாது என்பதில் இளையவர், பெரியவர் என்று அனைத்து கைவினைஞர்களும் உறுதியாக இருக்கிறோம். எனவே, இது போன்ற சிற்பங்களை செதுக்கும் போது, ஒரு தவயோகியை போலவே வாழ்கிறோம். இது கூட உயிர்ப்புள்ள சிற்பங்கள் உருவாவதற்கு முக்கிய காரணம் தான்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

கைவினைஞர்கள் என்பதே பெருமை

மரச்சிற்ப கைவினைஞர்கள் தங்களது வாரிசுகளை நன்றாக படிக்க வைக்கின்றனர். இவர்களில் பலர் பட்டதாரியாகவும், வழக்கறிஞராகவும், பொறியாளராகவும் உள்ளனர். ஆனாலும் பலரது வாழ்க்கை பயணம், மரச்சிற்பங்களோடு தான் தொடர்கிறது. எங்களை பொறுத்தவரை பட்டதாரிகள் என்பதை விட, கைவினைஞர்கள் என்பதே பெருமை. ஆனாலும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்வதை தவிர்க்க முடியவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் அரசு சலுகைகளை வழங்க வேண்டும். இதனால் அடுத்தடுத்த தலைமுறையும் இந்த தொழிலில் ஈடுபட வாய்ப்புகள் உருவாகும்,’’ என்பதும் இவர்களின் ஆதங்கம்.

மலேசியாவில் மவுசு அதிகரிப்பு

ஆழ்ந்து சிந்தித்து நாங்கள் உருவாக்கும் சிற்பங்கள், உள்ளூரை விட வெளிநாடுகளில் அதிகம் செல்கிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் தூக்கும் காவடிகள் தம்மம்பட்டியில் இருந்து செல்கிறது. முருகன் சிற்பத்துடன் நுட்பமாக உருவாக்கப்படும் மரக்காவடிகள், பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை தரகர்கள் மூலமே சொற்ப தொகைக்கு விற்க வேண்டியுள்ளது. அரசே எங்களது படைப்புகளை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்தால், திறமைக்குரிய வருவாய் கிடைக்கும்,’’ என்பதும் கைவினைஞர்களின் கோரிக்கை.

படைப்புகளை பாதுகாக்க தேவை புவிசார் குறியீடு

பண்டைத் தமிழர் பயன்படுத்திய பல உபகரணங்கள் இன்று மரச்சிற்பங்களாக மலேசியா, மொரிசியஸ், இந்தோனேசியா தீவுகளிலும், பெருநாட்டிலும் வலம் வருகிறது. இப்படி பல மாகாணங்கள், தீவுகளில் வசிக்கும் மக்கள் ரசித்து லயிக்கும் சிற்பங்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அது மட்டும் கிடைத்து விட்டால் எங்கள் படைப்புகளை யாரும் நகல் எடுக்க முடியாது. இது கலையை காத்து நிற்பதோடு அடுத்த தலைமுறைக்கும் நாம் சமர்பிக்கும் நுட்பமாகவும் இருக்கும்,’’ என்பதும் இவர்களின் மனக்குமுறல்.



Tags : world ,Thammampatti , Cottage, fine arts and crafts, wood carvings, thammampatti
× RELATED சில்லி பாயின்ட்…