×

கொளுத்தும் வெயிலால் ராமநதி அணை நீர்மட்டம் கடும் சரிவு: குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கடையம்: கோடைபோல் கொளுத்தும் வெயிலால் கடையம் ராமநதி அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால் வரும் நாட்களில் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கடையம் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தபேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுற்றுவட்டார கிராம மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது.

கடந்த வடகிழக்கு பருவமழையின் போது நீர்வரத்து அதிகரித்து அக்.30ம் தேதி அணை முழு கொள்ளளவை எட்டியது. தொடர்ந்து பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர்மட்டம் சரிந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி 49.50 அடியாக நீர்மட்டம் உள்ளது. இருப்பினும் அணையில் 27 அடிக்கு கல், மண், சகதிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் 22.50 அடிக்கே தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து 5 கன அடியாக உள்ளது. தற்போது கோடைபோல் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிவை கண்டுள்ளது. இதனால் வரும் நாட்களில், இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

Tags : Ramanathi Dam , Ramanati Dam, Drinking Water
× RELATED கொளுத்தும் வெயிலால் ராமநதி அணை வறண்டது: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்