×

‘நல்ல மந்திரி பதவியை தரவில்லை...கதர்துறைதான் தந்தார் ஜெயலலிதா’: அரசு விழாவில் அமைச்சர் பாஸ்கரன் புலம்பல்

காரைக்குடி: நல்ல மந்திரி பதவியை தராமல், கதர் துறையைத்தான் ஜெயலலிதா வழங்கினார் என அரசு விழாவில் அமைச்சர் பாஸ்கரன் புலம்பியது, அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரிய அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: நமது மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டம். இங்கு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் உள்ளனர். இங்கு ஏற்கனவே சிலர் பெரிய, பெரிய பதவியில் இருந்தார்கள். அடுத்த பிரதமர் என்றார்கள். பொருளாதார நிபுணர் என்றார்கள். அவர்கள் நினைத்து இருந்தால் எத்தனையோ தொழிற்சாலையை கொண்டு வந்து இருக்கலாம். லண்டனில் தொழிற்சாலை துவங்குகிறார்கள். அவர்கள் நினைத்து இருந்தால் இந்த மாவட்டத்தை சிங்கப்பூர் ஆக்கி இருக்கலாம்.

இந்த மாவட்டத்தை குட்டிச்சுவர் ஆக்கி விட்டு போய் விட்டார்கள்
நாங்கள் சாதாரண ஆட்கள். முதல்வரிடம் இப்பகுதியின் தேவை குறித்து பேசுகிறோம். இப்பகுதி மக்கள் விவசாயத்தை நம்பி மோசம் போய் விட்டார்கள். எனவே இங்கு தொழிற்சாலை வேண்டும். படித்தவர்கள் வேலையில்லாமல் உள்ளார்கள். நாங்கள் இந்த பகுதியை அறிந்தவர்கள். அடிமட்ட தொண்டனாக இருந்து இன்று மந்திரியாகி உள்ளோம். அதுவும் ஜெயலலிதா ஒரு நல்ல மந்திரி பதவியை தராமல் கதர் துறையைத்தான் கொடுத்தார். எங்களால் முடிந்தவரை இந்த பகுதிக்கு தேவையானதை செய்து வருகிறோம். இந்த பகுதிக்கு தேவையானதை நிறைவேற்ற வேண்டுமென முதல்வரிடம் சண்டையிடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அரசு விழாவில் அமைச்சர் தனக்கு ஜெயலலிதா, நல்ல அமைச்சர் பதவியை தரவில்லையென குறை கூறியது, அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

யார் சேர்மன்? மனைவியா, கணவரா?
விழாவில் அரசு பதவியிலோ அல்லது மக்கள் பிரதிநிதியாகவோ இல்லாத சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சரண்யாவின் கணவர் செந்தில் முன்வரிசையில் அமர வைக்கப்பட்டு இருந்தார். மேலும், அமைச்சர் பேசும்போது, ‘சாக்கோட்டை சேர்மன் செந்தில்’ என பேசினார். தலைவராக பெண்  தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது கணவரை சேர்மன் என அரசு விழாவில் அமைச்சர் அழைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Tags : Baskaran ,Gayathalai ,Jayalalithaa ,government ceremony , Gayathalai gave the news, Jayalalithaa, government ceremony, Minister Baskaran, lament
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...