×

ஆட்டோமொபைல்: அசத்தும் டாடா புதிய 7 சீட்டர் கார்

2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்றது. இங்கு உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளன.
அந்த வகையில், டாடாவும் அதன் புதிய கிராவிடஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்த காரின் மிகச்சிறப்பான விஷயமாக மூன்று இருக்கை வரிசை மற்றும் ஏழு பேர் வரை அமர்ந்து செல்லும் வசதி காணப்படுகிறது. இத்துடன், இந்த கார் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது கூடுதல் சிறப்பு. இதுமட்டுமின்றி, இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற்றிருக்கிறது. இந்த கார், நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஷோரூம்களில் காட்சிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா நிறுவனம் இப்புதிய காரை, அதன் பிரபல ஹாரியர் மாடலைவிட சற்று நீளமானதாக தயாரித்திருக்கிறது. மேலும், அகலமும் இதைவிட சற்று அதிகம். ஆனால், உயரம், கிரவுண்ட் கிளியரன்ஸ் ஒரே அளவை கொண்டுள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இது கிடைக்கும். இது மட்டுமின்றி, சாலையில் செல்லும்போது பலரை கவர்கிற வகையில் கவர்ச்சியான லுக்கையும் இந்த காருக்கு டாடா வழங்கியுள்ளது. குறிப்பாக, இந்த காரின் கிரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் படு அமர்க்களமான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இதன் ரூப் மற்றும் திடகாத்திரமான உடல் தோற்றம் லேசான வித்தியாசத்தை வழங்குகிறது.

இந்த காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 18 அங்குல அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொழில்நுட்ப வசதியாக 8.8 இன்ச் கொண்ட தொடு திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி இணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் சிஸ்டம், டெர்ரயின் மோடு, டிரைவிங் மோடு, க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி கலர் டிஸ்பிளே மற்றும் புஸ்-பட்டன் ஸ்டார்ட் என பிரிமியம் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பயணிகள் நேரடியாக விண்ணை ரசிப்பதற்காக சன் ரூப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, பாதுகாப்பு வசதியிலும் இந்த கிராவிடஸ் அதிசிறப்பு வாய்ந்ததாக உள்ளது. குறிப்பாக, 6 ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் வியூ கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டெசண்ட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் இந்த காரில் உள்ளது. இந்த கார், பிரிமியம் வசதியில் மட்டுமின்றி, பாதுகாப்பிலும் தலைசிறந்த காராக விளங்குகிறது. ஏழு இருக்கை வசதிகொண்ட கிராவிடஸ், டாடா ஹாரியரை காட்டிலும் ₹1 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

* மாருதியின் புதிய கூபே கார்
எதிர்காலத்தில் தனது சந்தையை வலுவாக வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக மாருதி திட்டமிட்டுள்ளது. அதன்படி, பியூச்சரோ-இ என்ற புத்தம் புதிய கான்செப்ட் மாடல் கார் ஒன்றை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார், கூபே எஸ்யூவி ரக கார் போன்று பின்புறம் தாழ்ந்த கூரை அமைப்பை பெற்றிருக்கிறது. உருவத்தை வைத்து பார்க்கும்போது இந்த கார், கியா செல்டோஸ் உள்ளிட்ட எஸ்யூவி ரக மாடல்களுக்கு இணையான அளவுகளில் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார், 4 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இது, கூபே ரக மாடலாக இருந்தாலும், பின் இருக்கையில் பயணிகளுக்கு தலை இடிக்காத வகையில் போதிய இடவசதியை பெற்றிருக்கிறது. இந்த கார், எல்இடி விளக்குகளுடன் மிக அசத்தலாக காட்சி தருகிறது. வழக்கமான மாருதி மாடல்களில் இருந்து இது சற்றே மாறுபட்ட, இளமை துள்ளும் டிசைன் அம்சங்களுடன் காட்சி தருகிறது. இது, நிச்சயம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் வகையில் இருக்கும். இந்த கான்செப்ட் காரின் மற்றொரு முக்கிய அம்சம், இது மிக விரைவில் தயாரிப்பு நிலைக்கு மாறும் வகையிலான அம்சங்களை பெற்றிருக்கிறது. எனவே, கூடிய விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக உருப்பெறும் வாய்ப்புள்ளது. இந்த கான்செப்ட் காரின் உட்புற டிசைன் அம்சங்கள் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் இயங்கும் கார் மாடலாகவும் உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் அறிவிக்கப்படவில்லை.

* கியா மோட்டார்ஸ் அடுத்த அதிரடி..!
கியா செல்டோஸ் காருக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து அதைவிட விலை குறைவான காம்பேக்ட் எஸ்யூவி ரக மாடலை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கியா சொனெட் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் எஸ்யூவி ரக கார், ஹூண்டாய் வெனியூ காரின் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறது. கியா சொனெட் கான்செப்ட் எஸ்யூவி ரக கார், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட், பகல்நேர விளக்கு ஆகியவை வசீகரிக்கிறது. வலிமையான தோற்றத்தை தரும் வகையில் அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. கச்சிதமான பின்புற எல்இடி டெயில் லைட் இடம்பெற்றுள்ளது. ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும். இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன்கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி செயலி, நேரடி இன்டர்நெட் வசதி, போன் ஆடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை வசியம் செய்கிறது. இந்த கார், கான்செப்ட் மாடலாக இருந்தாலும், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் தயாரிப்பு நிலை மாடலாக உயர்ந்து, விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், இந்தியாவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் போர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

* ரெனோ ட்ரைபர் காரில் ஏஎம்டி அறிமுகம்
இந்தியர்களின் எம்பிவி ரக கார் கனவை பூர்த்தி செய்யும் வகையில் ரெனால்ட் நிறுவனம் கடந்த ஆண்டு மலிவு விலை ட்ரைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதற்கு முன்பு வரை அடித்தட்டு மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்த எம்பிவி ரக காரானது ட்ரைபரின் அறிமுகத்திற்கு பின்னரே சாத்தியமானது. குறிப்பாக, இது யாரும் எதிர்பாராத விலையில் இந்தியாவில் விற்பனைக்கு களமிறங்கியது. இதனால், இந்திய எம்பிவி ரக கார்கள் சந்தையில் ரெனால்ட் ட்ரைபர் தற்போது புரட்சியை செய்துகொண்டிருக்கிறது. இதன் விலை மலிவானதாக இருந்தாலும் பல்வேறு சிறப்பு வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி ரக காரில், ஏஎம்டி அறிமுகம் செய்யப்படாமல் இருந்தது பெரும் குறையாக இருந்தது. ஏஎம்டி என்பது ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அம்சம் ஆகும். தற்போது இதை, ரெனால்ட் நிறுவனம், இந்த மினி எம்பிவி ரக காரில் அறிமுகம் செய்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 2020ம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போ நடந்து வருகிறது. இங்கு பல உலகளாவிய நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இங்குதான் ரெனால்ட் நிறுவனம் அதன் சிறப்பு வாய்ந்த காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்கிரேட்தான் இந்த ரெனால்ட்டில் வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய அப்டேட் ஆகும்.

ரெனால்ட் நிறுவனம், இந்த ட்ரைபர் எம்பிவி ரக காரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த கார், இந்தியாவில் நடப்பாண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஆர்எக்ஸ்இசட் என்ற வேரியண்டில் கிடைக்க உள்ளது. இந்த இன்ஜின் 1.0 லிட்டர் கொண்ட மூன்று சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் ஆகும். இது, அதிகபட்சமாக 72 பிஎச்பி மற்றும் 96 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஐந்து வேக கட்டுப்பாடு திறன் கொண்ட இந்த ஏஎம்டி இன்ஜின், முன்பக்க சக்கரத்தை இயக்கும் தன்மை கொண்டுள்ளது.

அத்துடன், இந்த சிறப்பு வாய்ந்த காரை தனித்துவமாக அடையாளப்படுத்தும் விதமாக காரின் பக்கவாட்டு பகுதியில் ஈசி-ஆர் என்ற டேக்குகள் ஒட்டப்பட்டுள்ளது. இது, ட்ரைபரை ஏஎம்டி என தனிமைப்படுத்தி காட்டும். இதன் கேபினானது எம்டி வேரியண்டை போன்றே சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. ஆனால், கியர்லிவர் மட்டும் சற்று வித்தியாசமானதாக உள்ளது. இத்துடன், இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டரில் லேசான மாடிபிகேஷன் செய்யப்பட்டுள்ளது. தானியங்கி கியர்பாக்ஸ் என்பதால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த வருடமே களமிறங்க இருக்கும் இந்த கார், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் விலை அதிகரிப்பை கொண்டு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார், இந்தியாவில் விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி ஸ்விப்ட் ஏஎம்டி மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் ஏஎம்டி கார்களுக்கு போட்டியாக இருக்கும். ஏற்கனவே, இந்த கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கூடுதல் அம்சம் இதன் விற்பனையை இன்னும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tags : Automobile, Asante, Tata, 7 seater car
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...