×

மக்களின் பார்வையில் இந்த வார பிரச்னைகள்

* நாய்கள் தொல்லை... ஜாக்கிரதை..
மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4 வது வார்டில் உள்ள கங்கை கொண்டான் தெருவில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வெறி நாய்கள் அலைந்து திரிகிறது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நாய்கள் அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகளை கடித்து விடுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் நான்கு பேரை கடித்துள்ளது. இது சம்பந்தமாக மாமல்லபுரம் பேரூராட்சிக்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. - மொ.சம்சுதீன், டிராவல்ஸ் உரிமையாளர், மாமல்லபுரம்.

* புதிய குடிநீர் குழாய் பதிக்க வேண்டும்
திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடி நீர் வழங்கப்படுகிறது. குடிநீர் குழாய்கள் புதைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதாலும், அதிக வாகனப் போக்குவரத்தாலும் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் பல இடங்களில் உடைந்து நீர் அதிக அளவில் வீணாகிறது. இவ்வாறு வீணாகும் நீரை ஒரு நாளைக்கு பொது மக்களுக்கு சப்ளை செய்யலாம். ஆகவே பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்து உள்ள குடிநீர் குழாய்களை அகற்றி புதிய குழாய்களை பதித்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். -ந. எழிலரசன்,  நகைக்கடை ஊழியர், திருப்போரூர்.

* 3 கிமீ சுற்றும் பொதுமக்கள்
கிழக்கு பொத்தேரியில் உள்ளவர்கள் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகளுக்கு சொல்வதற்கு பொத்தேரி ஏரிக்கரை சாலை வழியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நகராட்சி சார்பில் ஏரிக்கரை மேல் தார் சாலை அமைப்பதற்கு பொதுப்பணித்துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலை போட முடியாமல் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனால் 4 கி.மீ தூரம் உள்ள கூடுவாஞ்சேரிக்கு சென்றும் அல்லது 3 கி. மீட்டர் தூரம் உள்ள மறைமலைநகர் சுற்றிக்கொண்டும் செல்ல வேண்டியுள்ளது. - மெ.முத்து, சமூக ஆர்வலர், கிழக்கு பொத்தேரி.


* காஞ்சிபுரம் கோயில் பகுதியை கவனியுங்க...
காஞ்சிபுரத்தில் கோயில்களைச் சுற்றியுள்ள பகுதிகள் நகராட்சியால் முறையாக சுத்தம் செய்யபப்படுவது இல்லை. காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் எதிரில் அடிக்கடி கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நகராட்சி பணியாளர்கள் சரிசெய்தாலும் மீண்டும் இரண்டு நாள்களில் அடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. காமாட்சி அம்மன் கோயில் மாடவீதியில் தெற்கு கோபுரம் பகுதியில் குப்பைத்தொட்டி நிரம்பி வழிகிறது. இதனை முறையாக அகற்றுவது இல்லை. - ஆர்.வி.குப்பன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், காஞ்சிபுரம்.

* கருவேல மரங்களால் பாதிப்பு
ஆலந்தூர் 12 வது மண்டலத்திற்கு உட்பட்ட 160 வது வார்டு மாதவபெருமாள் தெருவில் உள்ள பல ஏக்கர பரப்பளவு கொண்ட காலி மனையில் கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து காடுபோல காணப்படுகிறது. நிலத்தடி நீரை இந்த மரங்கள் உறுஞ்சுவதால் நீர்ஆதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் பூச்சிகள் வண்டுகள் வீடுகளில் படை எடுக்கின்றன. இந்த கருவேல மரங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - கலாநிதி குணாளன், சமூக ஆர்வலர், ஆலந்தூர்.

* மந்தகதி பணியால் நெரிசல்
சோழவரம் அடுத்த காரனோடை, ஜனப்பன்சத்திரம் கூட்டு சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினரால் 2 ஆண்டுக்கு முன்பு மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது. இந்த பணி மந்தகதியில் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.- தமிழ்ச்செல்வன், எலக்ட்ரீசியன், ஜனப்பன்சத்திரம்.

* பட்டா கிடைக்குமா ஆபீசர்?
பெரியபாளையம் அருகே ராள்ளப்பாடி ஊராட்சியில் சுமார் 40 வருடங்களுக்கு மேல் வசிக்கும் 20க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்துள்ளோம். ஆனால் இதுவரை பட்டா வழங்க வில்லை. ராள்ளபாடி ஊராட்சியில் பக்கத்து ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். இதனால் இங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. - பாபு, ஓட்டுநர், ராள்ளபாடி.

* பெண்களிடம் குடிமகன்கள் சில்மிஷம்
ஆவடி அடுத்த பட்டாபிராம், சி.டி.எச் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் 6 டாஸ்மார்க் கடைகள் உள்ளன. இங்குள்ள பார்கள் 24மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இதனால், இளைஞர்கள் உள்பட குடிமகன்கள் எப்போதும் மதுபானங்களை அருந்தி விட்டு இரு சக்கர வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்கின்றனர். இதன் காரணமாக, சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஆகின்றன. மேலும், குடிமகன்கள் அரைகுறை ஆடைகளுடன் சாலையில் உலா வருகின்றனர். இதோடு மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் குடிமகன்கள் பெண்களிடம் சில்மிஷம், பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். -சுதேசி கலைச்செல்வி, திருநின்றவூர்.

* பார்க்கிங் இல்லாததால் நெருக்கடி
கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்துப்பக்கம், ரெட்டம்பேடு, வழுதலம்பேடு, குருவி அகரம், கள்ளூர், பட்டுபுள்ளி, உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் தங்களுடைய தேவைகளுக்காக தினந்தோறும் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதும் போவதுமாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் ரெட்டம்பேடு சாலை ஓரமாக உள்ள சுமார் 5 திருமண மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் முகூர்த்த நாட்களில் கூட்டநெரிசல், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் பார்க்கிங் இல்லாத திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்த தடை செய்ய வேண்டும். - கே. அர்ஜுனன்,
சமுக ஆர்வலர்.

* விபத்து அபாயம்..
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் சந்திப்பு, நான்கு வழிப் பாதையில் போக்குவரத்து போலீசார் இல்லாததால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் மின்னல் வேகத்தில் திரும்பி செல்கின்றன. வாகன விபத்துகள் ஏற்படாமல் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும். -பன்னீர், தத்தமஞ்சி.

* 25 படிக்கட்டு ஏறணுமா?
திருவிக நகர் 64வது வார்டில் அஞ்சுகம் நகரில் கீழ் தளத்தில் இயங்கி வரும்  இ-சேவை மையத்தை இன்னும் 10 நாட்களில் முதல் மாடிக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. வயதானவர்கள், கர்ப்பிணிகள் சுமார் 25 படிக்கட்டுகள் ஏறி முதல் மாடிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
-சி.கோபால், பால் வியாபாரி, கொளத்தூர்.

* நிழற்குடை வசதி தரப்படுமா?
பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில், அனகாபுத்தூர் அரசுப் பள்ளி அருகே, பயணிகள் நிழற்குடை இல்லாததால், பேருந்து ஏற்றுவதற்காக வருகை தரும் மாணவ, மாணவிகள் மற்றும் முதியோர்கள் வெயிலில் காத்துக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே இந்த சாலைகள் மிகவும் குறுகிய சாலையாக இருப்பதால் எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். இந்த நிலையில் நிழற்குடை வசதி இல்லாததால், பேருந்து ஏற வரும் மாணவ, மாணவிகள் நிழலுக்காக சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக நிற்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. - ஜான்சியா வின்சென்ட், வியாபாரி, பொழிச்சலூர்.

Tags : People's vision, this weekend's problems
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...