×

குவியும் சுற்றுலாப் பயணிகளை குஷிப்படுத்த குளுகுளு பூமியில் கலர்புல் சுற்றுலா

* கூடுதலான இடங்களையும் கண்டு களிக்கலாம்
* நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்

தொடர் விடுமுறையா, கோடை விடுமுறையா... உடனே நம்ம மனசுக்குள் வருவது மலைகளின் அரசி ‘ஊட்டி’ அல்லது ‘மலைகளின் இளவரசி’ கொடைக்கானலாக இருக்கும். இல்லையா...? இதுல, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். ஏரியில் படகு சவாரி, பரந்து விரிந்த பிரையண்ட் பூங்காவில் பூக்களை ரசிப்பது, குடும்பமாக விளையாடுவது, குதிரை சவாரி, சைக்கிள் ஓட்டுதல், தூண் பாறை, குணா குகை, பைன் பாரஸ்ட் என பல்வேறு இடங்களில் சுற்றுலாப்பயணிகள் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். சமீபத்தில் கூட பொங்கல் தொடர் விடுமுறை, குளிர் சீசனையொட்டி சுற்றுலாப்பயணிகள் அதிகளவு கொடைக்கானலில் குவிந்துள்ளனர். இதனால் சமீபகாலமாக கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுற்றுலாப்பயணிகள், உள்ளூர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஸ்கைவாக் வருமா?: வெளிநாடுகளில் தற்போது பிரபலமாகி வரும் ‘ஸ்கைவாக்’ எனப்படும் ஆகாய நடை மேடையை கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைத்தால் சுற்றுலா மேம்படும். ஸ்கைவாக் முதன்முதலில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஏற்காட்டில் தனியார் ஓட்டல் நிர்வாகம் ஸ்கைவாக் ஒன்றை அமைத்து உள்ளது. இயற்கை எழில் காட்சிகளை மலை முகடுகளை மிக உயரத்தில் இருந்து அருகில் சென்று, பார்க்கும்விதமாக உடையாத கண்ணாடிகளால் இந்த ஆகாய நடை மேடை அமைக்கப்படும். முதன்முதலில் 3டி அமைப்பும், 5டி அமைப்பும் அமைக்கப்பட்டது. தற்போது 7டி அமைப்பு முறையில் இந்த ஆகாய நடைமேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு மயிர்க் கூச்செறியும்விதமாக அமைக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகளை உலக நாடுகள்  கவர்ந்து வருகிறது.

எங்கு அமைக்கலாம்: கொடைக்கானலை பொறுத்தவரை கோக்கர்ஸ்  வாக், வட்டக்கானல், டால்பின் நோஸ் வனப்பகுதி, பசுமை  பள்ளத்தாக்கு, குணா குகை, கொடைக்கானல் ஏரி அருகே ஸ்கைவாக் அமைக்கலாம். அரசோ அல்லது தனியாரிடமோ ஒப்படைத்து இதனை உருவாக்கலாம்.மரங்களுடன் பேசுவோமா: அடுத்ததாக, ‘ட்ரீ வாக்’ எனப்படும் மர பாலங்கள் அமைத்து உயரமான  இடங்களில், பாதுகாப்பான மரங்களுக்கு இடையே சுற்றுலாப்பயணிகள் நடந்து செல்வதற்கு ஏற்ப நடைமேடை அமைக்கலாம். இதுபோன்ற நடைமேடைகள் கொடைக்கானல் குணா குகை பகுதியில் சிறிதளவே உள்ளது. மன்னவனூர் பகுதியில் பாரா கிளைடிங் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி மேம்படுத்தலாம்.

கொடைக்கானல் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையின்  ஒத்துழைப்புடன் மூலிகை சுற்றுலா மற்றும் ட்ரெக்கிங் (மலையேற்ற  பயிற்சி) மேற்கொள்ளலாம். வனப்பகுதியை மேல்மலை கிராமங்களில் நீர்நிலை பகுதிகளோடு கூடிய சூழல்  சுற்றுலா கூடாரங்களை அமைக்கலாம். சுற்றுலாப்பயணிகள் இங்கு இயற்கை சூழலோடு  தங்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். இதுபோன்ற கூடுதலாக சில பொழுதுபோக்கு அம்சங்களை சேர்த்தால் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிக்கும். போக்குவரத்து நெரிசலும் தீருமென சுற்றுலாப்பயணிகள், வாடகை வாகன டிரைவர்கள் தெரிவிக்கின்றனர்.

மல்டி லெவல் பார்க்கிங் வருமா?: இதுகுறித்து வாடகை வாகன டிரைவர்கள் கூறியதாவது: கொடைக்கானலில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போக்குவரத்து பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். எனவே, வாகனங்களை நிறுத்த, கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் மல்டி லெவல் பார்க்கிங்கை உடனடியாக அமைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தி போக்குவரத்தை மாற்றி அனுப்புவதுடன், சாலையின் ஒருபுறம் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யலாம். கனரக வாகனங்களை நிறுத்துவதற்கு கொடைக்கானல் பஸ்நிலையம் அருகில் அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 50 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்தலாம்.

ஒன்வே அவசியம்: கொடைக்கானல் நோக்கி வரும் வாகனங்களை காட்ரோடு, ஊத்து, பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் மேற்பார்வையில் சிறிது நேரம் நிறுத்தி வைத்து, நெரிசல் குறைய, குறைய அனுப்பலாம். இதேபோல் வனப்பகுதிக்குள் உள்ள சுற்றுலா இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இட வசதி செய்து தர வேண்டும். குறிப்பாக ஒருவழிப்பாதை முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா இடங்கள், ஏரி பகுதிகளில் சீசன், விடுமுறை காலங்களில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும்.

சீக்கிரம் திறக்கலாமே: கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை ஆகிய பகுதிகளுக்கு வனத்துறை செக்போஸ்ட் தாண்டிதான் செல்ல வேண்டும். ஆனால் காலை 10 மணிக்கு பிறகுதான் இந்த செக்போஸ்ட் திறக்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளில் வாகன நெரிசல் வாடிக்கையான ஒன்றாகி விட்டது. சீசன், தொடர் மற்றும் வார விடுமுறை நாட்களில் இந்த செக்போஸ்ட்டை வனத்துறையினர், காலை 7 மணிக்கு திறந்து விட்டால் வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம்.

கோடை சீசனில் மட்டும் அரசு அதிகாரிகள், காவல்துறையினர் வாகன பார்க்கிங் வசதி செய்வதற்கு ஆலோசனை நடத்துவார்கள். பின்னர் சீசன் முடிந்ததும் அடுத்த சீசனுக்குதான் இந்த பேச்சை எடுப்பர். இப்படித்தான் பல ஆண்டுகாலம் இப்பிரச்னைகள் நீடித்து வருகின்றன. எனவே இந்த நடவடிக்கைகளை உடனே ஆய்வு செய்து மேற்கொண்டால் கொடைக்கானலில் நிலவும் போக்குவரத்து நெரிசல், பார்க்கிங் பிரச்னைகள் ஓரளவு கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு கூறினர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தீரா தலைவலியாக நீடிக்கும் போக்குவரத்து நெரிசலை தீர்க்க மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள், நகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* விடுதிகளை முறைப்படுத்தலாமே?
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொடைக்கானலில் முறைகேடாக கட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றுக்கு மாற்றாக கூடுதலாக விதிமுறைகளுடன் கூடிய தங்கும் விடுதிகளை அமைக்க வேண்டும். இவைகள் சீசன் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனவா என நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பொங்கல் விடுமுறையின்போது குவிந்த சுற்றுலாப்பயணிகள் பலர், தங்கும் விடுதிகளின்றி, சீல் வைத்த விடுதிகளில் அதிக பணம் கொடுத்து தங்கியதாகவும் புகார் எழுந்துள்ளது.

* மூணாறை இணைக்கலாமே?
கொடைக்கானலுக்கு கூடுதல் சாலையாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலை பணிகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இதனை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரும்பட்சத்தில் இச்சாலையை ஒருவழிப்பாதையாக பயன்படுத்த முடியும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம். இதேபோல் கொடைக்கானல் பேத்துப்பாறை வழியாக பழநிக்கு புதிய சாலை அமைத்தால் இன்னும் இலகுவாக போக்குவரத்தை சீர்படுத்த முடியும். மேலும், கொடைக்கானல் - மூணாறு சாலை அமைந்தால் கொடைக்கானலில் நிலவி வரும் நெருக்கடியே இல்லாமல் போய்விடும். மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, போளூர், கிளாவரை வழியாக மூணாறுக்கு சாலை அமைக்கலாம் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

* பல மணிநேரம் பரிதவிப்பு
மலைச்சாலையில்  இருந்து கொடைக்கானல் நகர் பகுதியில் நுழையும்போது துவங்கும் போக்குவரத்து நெரிசல், முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் வரை தொடர்கிறது. அன்றாட இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மனதையும், உடலையும் மென்மையாக்க கொடைக்கானல் வரும் சுற்றுலாப்பயணிகள் நெரிசலில் சிக்கி 2 அல்லது 3 மணிநேரம் தவிப்பதும், வாகனங்களை நிறுத்த இடமின்றி அலைவதும் தொடர்கதையாக உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறை மற்றும் தற்போது பொங்கல் தொடர் விடுமுறையில் இந்த பிரச்னைகள் எல்லை மீறி போனதால் சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் நகரில் வசிக்கும் மக்களும் அவசரத்திற்கு எங்கும் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

* பழநி - கொடைக்கானல்  ரோப்கார் என்னாச்சு?
தமிழகத்தின் சுற்றுலாவளத்தை மேம்படுத்த பழநி - கொடைக்கானலுக்கு ரோப்கார் திட்டத்தை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை பலமாக எழுந்தது. இதுகுறித்து தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. இதன்மூலம் 45 நிமிடத்தில் கொடைக்கானலை அடையலாம். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலையும், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலையும் இணைக்கும்விதத்திலும், பரந்து விரிந்த பசுமையான மலைப்பகுதியை ஆகாயவெளியாக ரசிப்பதற்காகவும் இத்திட்டம் பரிசீலனை செய்யப்பட்டது. ஆனால், அதற்கான திட்ட மதிப்பீடோ, ஆய்வுகளோ இதுவரை நடத்தப்படவில்லை. நவீன அறிவியல் உலகில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பழநி - கொடைக்கானல் இடையே ரோப்கார் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற முடியும். இத்திட்டம் நிறைவேறினால் கொடைக்கானல் உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாறுவது உறுதி. இத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றினால் சுற்றுலாப்பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : earth ,Kulukulu Earth , Accumulating Tourist, Kushipadda, Kukulu Earth, Colorful, Travel
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...