×

இ-வே பில் இல்லாமல் சென்றால் ரூ. 10 ஆயிரம் அபராதம் ஜிஎஸ்டி விதியை மீறும் அதிகாரியால் கடும் இழப்பு: வணிகவரித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

சென்னை: இ-வே பில் இல்லாமல் சரக்கு வாகனங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்க உயர் அதிகாரி உத்தரவிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கிடையே, ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் சரக்குகளை எடுத்துச் செல்லவும், மாநிலத்துக்கு உள்ளே, ரூ. 1 லட்சத்துக்கு அதிகமான சரக்குகளை எடுத்துச் செல்லவும், ஆன்லைன் வாயிலாக அனுமதி பெறும், ‘இ  வே’ பில், கடந்த 2018 ஜூன் 2ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு முறையும் சரக்குகளை எடுத்து செல்லும் போது இ வே பில் பெறப்பட்டு வாகனங்களில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பில் இல்லாமல் பொருட்கள் எதுவும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க வணிகவரித்துறை சார்பில் புலனாய்வு குழு செயல்படுகிறது.

இந்த குழு மாநிலம் முழுவதும் இ-வே பில் இல்லாமல் சரக்கு வாகனங்கள் கொண்டு சென்றால் அபராதம் விதிக்கிறது. குறிப்பாக, சரக்குகளுக்கான உரிய இ-வே பில் இல்லையெனில், சரக்கு மதிப்பிற்கேற்ப வரி மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். ஆனால், இ-வே பில் இல்லாமல் சரக்குகள் பிடிபட்டால் அந்த வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தற்போது சரக்கு வாகனங்களில் இ-வே பில் இல்லாமல் இருந்தால் ரூ. 10 ஆயிரம் மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு, ஆவணங்கள் இன்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு, குறைந்தபட்ச அபராதம் விதிப்பதால், வருவாய் வசூல் குறைந்துள்ளது.

இது குறித்து வணிகவரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
உரிய ஆவணங்கள் இன்றி, வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில், இயக்கப்படும் சரக்கு வாகனங்களை வணிக வரி ரோந்துப் படை அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அந்த வாகனங்களில், சரக்குகளுக்கான உரிய பில் மற்றும் இ வே பில் இல்லையெனில், சரக்கு மதிப்பிற்கேற்ப வரி மற்றும் அபராதம் விதிக்க வேண்டும். கடந்த ஆண்டு சரக்கு வாகனங்களில், இ-வே பில், ரசீது போன்றவை இல்லையெனில், குறைந்த பட்சமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதம் விதித்தால் போதும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால், தற்போது எந்த ஆவணங்கள் இன்றியும் வரும் வாகனங்களுக்கு, குறைந்தபட்ச அபராதமே விதிக்கப்படுகிறது. இதனால், அபராதம் வாயிலாக கிடைக்கும் வருவாய், வெகுவாக குறைந்துள்ளது. ஜிஎஸ்டி விதிப்படி ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு, உரிய அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, வருவாய் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : e-way ,business officials ,officer ,GOST ,Commerce ,Rs , E-Way Bill, Rs. 10 Thousand Fines, GST Rule, Violation Officer, Loss, Trade Department Officers, Warning
× RELATED கொரோனா தொற்று ஊரடங்கில் ஜூலை...