×

6 முதல் 12ம் வகுப்பு வரையிலான ஆங்கிலத்தில் உள்ள என்சிஇஆர்டி புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்: தஞ்சை தமிழ் பல்கலைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரையுள்ள  புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்குமாறு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகள், நாட், ஜி, ரயில்வே தேர்வு வாரிய தேர்வுகள், வங்கி பணியாளர்களுக்கான தேர்வு, தபால் துறை பணியாளர்கள் தேர்வு, எஸ்எஸ்சி போன்ற தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள் பெரும்பாலும் என்சிஇஆர்டி பாட திட்டங்களில் இருந்தே கேட்கப்படுகின்றன. என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புவரையிலான பாடங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ளன. தமிழக மாணவர்கள் தமிழ் வழியில் பாடங்களை படிப்பதால் அவர்களுக்கு என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை தெரிந்துகொள்வதிலும், கற்பதிலும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் கேட்கப்படும் கேள்விகளில் மொழிபெயர்ப்புகளில் தவறுகள் ஏற்படுவதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தவறாக எழுதிவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு மதிப்பெண்கள் இழப்பு ஏற்படுகிறது.
மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுடன் போட்டியிட முடியாத நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று ஆவடியை சேர்ந்த ஆர்.சந்தர் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தின்கீழ் 2019 செப்டம்பர் 27ம் தேதி மனு அனுப்பினார். அதற்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து பதில் வரவில்லை.

இதையடுத்து, தகவல் கோரி மேல்முறையீடு மனுவை அவர் தஞ்சை பல்கலைக் கழக பதிவாளருக்கு அனுப்பினார். உரிய பதில் கிடைக்காததால் அவர் மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த ஜனவரி 24ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை கலெக்டர் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் நேரில் ஆஜராகினர். விசாரணையின்போது, தஞ்சை தமிழ் பல்கலைக்கழம் மற்ற மொழிகளில் உள்ள இலக்கியங்களை தமிழிலிலும், தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணியை செய்கிறது.

அதற்காக மொழிபெயர்புக்கான துறை தஞ்சை பல்கலைக்கழகத்தில் உள்ளது என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு வருமாறு:தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மொழி பெயர்ப்பு துறையின் பணி களில் புத்தகங்களயும் மொழி பெயர்க்க  வகை செய்யப்பட்டுள்ளது. புத்தகங்களில் உள்ள கட்டுரைகளையும் மொழி பெயர்க்க அந்த துறைக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நீட், ஜி, யுபிஎஸ்சி, ஆர்.ஆர்.பி, பிஎஸ்ஆர்பி, தபால்துறை பணிகளுக்கான தேர்வு, எஸ்எஸ்சி ஆகிய தேர்வுகள் என்சிஇஆர்டி பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே தயாரிக்கப்படுவதால் அந்த பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முதல் படித்தவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஆனால், தமிழ் வழியில் படித்த தமிழக மாணவர்களால் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற முடியவில்லை.

எனவே, தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய புத்தககங்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. பாடப்புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி தமிழ் வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil , 6th to 12th Class, English, NCERT Book, Translate to Tamil, Tanjore Tamil University, State Information Commission, Directive
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு