×

முறைகேடுகளை தொடர்ந்து சீரமைப்பு பணி மும்முரம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறையில் மாற்றம்

* குரூப் 4, குரூப் 2 பதவிக்கு 2 நிலைகளாக தேர்வு
* கையெழுத்துக்குப்பதில் கைரேகை கட்டாயம்
* அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும்
* ஓஎம்ஆர் தாளில் 5வது கட்டம் சேர்ப்பு

சென்னை: குரூப் 4 மற்றும் குரூப் 2 பதவிகளுக்கான தேர்வு இனிமேல் இரண்டு நிலைகளாக நடைபெறும் என்றும் தேர்வர்கள் அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பல்வேறு முறைகேட்டை தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு (2018-19, 2019-20ம் ஆண்டுக்கானது), 2017ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வு ஆகிய 2 தேர்வுகளிலும் இடைத்தரகர் மூலமாக மிகப்பெரிய முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடியிடம் ஆவணங்களை டிஎன்பிஎஸ்சி ஒப்படைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி 45க்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளிகளும் சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் முறைகேட்டை தடுக்க டிஎன்பிஎஸ்சி அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதல் கட்டமாக 6 முக்கிய முடிவுகள் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் அறிவித்திருந்தார். அதாவது, தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்தவுடன், இறுதியாக தேர்வு பெற்ற நபர்கள் அனைத்து விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பிக்கும் போது ஆதார் எண் அளிப்பது என்பது கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதை நடைமுறைபடுத்தும் வகையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் தேர்ச்சி அடைந்த 181 பேரின் முழு விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரேங்க், மதிப்பெண், பாலின விவரம், கல்வித்தகுதி, தற்போதைய முகவரி, நிரந்தர முகவரி, மெயின் தேர்வு நடைபெற்ற தேர்வு கூடம், தேர்ச்சி பெற்றவரின் புகைப்படம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மேலும் 6 அதிரடி மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொகுதி 2 மற்றும் ெதாகுதி 4 தேர்வுக்கு பொது அறிவுத்தாள் மட்டுமே கொண்ட ஒரே ஒரு தேர்வு மட்டும் நடந்து வருகிறது. இனிவரும் காலங்களில் இருநிலைகளை கொண்டதாக இந்த தேர்வு நடத்தப்படும். அதாவது முதல் நிலை மற்றும் முதன்மை நிலை தேர்வுகளாக நடத்தப்படும். தேர்வு எழுத வரும் தேர்வர்களின் உண்மை தன்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வர்கள் காலை 9 மணிக்கு தேர்வு கூடங்களுக்கு வர வேண்டும். தேர்வு 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும். 10 மணிக்கு மேல் வரும் யாருக்கும் தேர்வு எழுத அனுமதி கிடையாது. தேர்வு நேரத்திற்கு பின்பு விடைத்தாளில் பதிவு செய்ய வேண்டிய கூடுதல் விவரங்களுக்காக 15 நிமிடம் கூடுதலாக வழங்கப்படும். காலை மாலை என்று இரண்டு வேளைகளில் தேர்வு இருந்தால் மாலை நடக்கும் தேர்வு 3 மணிக்கு தொடங்கும்.

இனி வரும்காலங்களில் தேர்வர்கள் அனைத்து வினாக்களுக்கும் பதில் அளிக்க வேண்டும். வினாவிற்கு விடை அளிக்க இயவில்லை மற்றும் விடை தெரியவில்லை என்றால் அதற்காக கூடுதல் கட்டங்களை கருமையாக்க வேண்டும். இதன்படி இனி விடைத்தாளில் 5 கட்டங்கள் இருக்கும். மொத்தம் எத்தனை கேள்விகளுக்கு விடைகளை நிரப்பியுள்ளார்கள் என்ற விவரத்தை தனியாக பதிவு செய்து அதற்கான கட்டங்களை நிரப்ப வேண்டும். இந்த கூடுதல் விவரங்களுக்காக மட்டும் ேதர்வு நேரத்திற்கு பிறகு 15 நிமிடம் வழங்கப்படும். ஐந்து கட்டங்களில் ஒன்றை கூட குறிக்க தவறினால் அந்த விடைத்தாள் செல்லாத விடைத்தாளாக அறிவிக்கப்படும். விடைத்தாள்களை அடையாளம் காண முடியாத வகையில் தேர்வு முடிந்த பிறகு தேர்வர்களின் விவரங்கள் மற்றும் விடையளிக்கும் பகுதி தேர்வர்களின் முன்னிலையில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தேர்வு அறையிலேயே சீலிடப்படும்.

இந்த சீலிடப்பட்ட உறை மீது சில தேர்வர்களிடம் கையெழுத்து பெறப்படும். விடைத்தாளை அடையாளம் காண இயலாத வகையில் தேர்வரின் கையெழுத்திற்கு பதிலாக தேர்வரின் இடது பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படும். தேர்வுமையங்களில் இருந்து விடைத்தாளை எடுத்து செல்ல தற்போது பின்பற்றப்படும் நடைமுறை முழுவதும் மாற்றப்பட்டு ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா வசதியுடன் கூடிய நடைமுறை பின்பற்றப்படும். இந்த நடவடிக்கை முழுவதும் சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் இருந்து 24 மணி நேரமும் கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். தேர்வாணையத்திற்கும் நேர்மையான முறையில் தேர்வுக்கு தயார்படுத்தி கொண்டு இருக்கும் தேர்வர்களுக்கும் இடையில் பிணைப்பை உறுதி செய்யும் வகையில் தேர்வாணைய இணையதளத்தில் ஒரு சிறப்பு தகவல் மையம் உருவாக்கப்படும். தேர்வுகளில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக தேர்வர்களின் கருத்துகளை பெறவும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் இந்த தளம் உதவியாக இருக்கும். இதில் தகவல் அளிக்கும் தேர்வர்களின் ரகசியத்தன்மை காக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DNBSC , Abuse, persistence, alignment work, busyness, DNBSC selection, methodology, modification
× RELATED கொரோனா பாதிப்பு எதிரொலி: சான்றிதழ்...